×

மூச்சை அடக்கினால் மனது அடங்கும்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 67 (பகவத்கீதை உரை)

பிறருக்கு உதவுவதாகிய சேவை உணர்வு இயல்பானது. எல்லோருக்குமே தோன்றக்கூடியது. ஆனால், அந்த உணர்வு, அடுத்து எத்தகைய பரிமாணம் எடுக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதன் மதிப்பு அமைகிறது. மிகச் சிறிய அனுபவத்திலிருந்து மிகப்பெரிய செயல்கள்வரை எந்தப் பலனையுமே எதிர்நோக்காத தன்மையைப் பழக்கிக்கொள்பவன்தான் ஞானி. ஏனென்றால் சிறு விதையிலிருந்துதான் மிகப்பெரிய மரம் உருவாகிறது.

சிறு அனுபவத்திலிருந்துதான் ஞானம் விரிவடைகிறது. இதற்கு அடிப்படைத் தேவை, எல்லாமே இறைவனுக்கு அர்ப்பணம் என்ற பக்குவம்தான். ஏற்கெனவே குறிப்பிட்டது போல, சாலையில் நடந்து சென்றவன் பகவான், அவன் கீழே தவறவிட்ட புத்தகமும் பகவான், அதை எடுத்துக் கொடுத்த தானும் பகவான். இவ்வாறு சகலத்திலும் இறையையே சிந்திக்கவும், காணவும், நடந்துகொள்ளவும் செய்பவன்தான் ஞானி.

ஒரு மலர் பூக்கிறது, தன் அழகால், மணத்தால் பிறரை மகிழ்விக்கிறது, பிறகு சந்தோஷமாக வாடி உதிர்கிறது. அதேபோல ஒரு காய், கனி பிறர் சுவைக்காக உருவாகிறது. அந்த சுவைக்குள்ளேயே அழிந்தும்போகிறது. இப்படி ஒரு மலரை, காயை, கனியை உருவாக்கித் தரும் செடி அல்லது மரம் எதை எதிர்பார்த்து அவ்வாறு உருவாக்குகிறது? எதிர்பார்ப்பு மட்டுமல்ல, எந்த பாதிப்புக்கு ஆளானாலும் அது தியாக உணர்வை மட்டுமே கொண்டுள்ளது. இதுதான் ஞானியின் நிலை.

ஆனால், மனித மனம், மரத்திலிருந்து மாறுபட்டது. ஒரு தாய்கூட பிற்காலத்தில் தன் மகன் தனக்கு உதவுவான், தன் இயலாமைக்காலத்தில் உறுதுணையாக இருப்பான், தன்னைக் காப்பாற்றுவான் என்று எதிர்பார்த்துதான் அவனைப் பெறுகிறாள். இது இயற்கையான மனித இயல்பு. ஆனால், வளரவளர சுயநலச்சூழலில் தன்னை அமிழ்த்திக்கொண்ட மகன், தாயை உதாசீனப்படுத்துகிறான். இரண்டு வயதுவரை தனக்குப் பேசக் கற்றுக்கொடுத்த தாயை, தான் வளர்ந்த பிறகு, ‘வாயை மூடு’ என்று கோபிக்கிறான்.

அப்போது மட்டுமல்லாமல், அடுத்தடுத்து அவனால் அவமானப்படும்போதும், அலட்சியப் படுத்தப்படும்போதும் அவள் பெரிதும் வேதனை அடைகிறாள். அவளால் ஞானியாக இருக்க முடியாதுதான். ஏனென்றால் இப்போதைய வாழ்க்கைச்சூழல் அப்படி. ஆனால், இவனைப் பொறுப்பாக வளர்க்க வேண்டியது தன்கடமை, அதற்குப் பிறகு நடப்பதெல்லாம்
இறைவன் சித்தம் என்று அவள் ஆரம்பத்திலேயே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு விட்டாளானால், எத்தகைய ஏமாற்றத்துக்கும் ஆளாக வேண்டியிருக்காது. ஆனால், அது சாத்தியமில்லை என்பதுதான் யதார்த்தம். எல்லாவற்றையும் பகவானுக்கே சமர்ப்பிக்கும் பக்குவத்தை எப்படி ஒரு ஞானி பெறுகிறான்? அவனுக்கு, கடவுள், காற்றைப் போல என்பது தெரியும். எங்கும் வியாபித்திருக்கிறவர். நீக்கமற நிறைந்திருக்கிறார்.

ஆகவே, அவனுடைய இயக்கங்கள் எல்லாவற்றிலுமே அவர் காற்றாக நிரவியிருக்கிறார். அதனால், எல்லாவற்றையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்வது என்பது ஞானிக்கு எளிதாகிறது. கோயில்
பிராகாரம் ஒன்றில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரது கால்கள் இறைவன் கொலுவிருக்கும் கர்ப்பகிரகத்தை நோக்கி நீண்டிருந்தது. இதைப் பார்த்த ஒருவர் அவரிடம் வந்து, ‘‘என்ன அபசாரம் செய்கிறீர்கள்! கடவுளுக்கு நேராகக் காலை நீட்டிப் படுத்திருக்கிறீர்களே, முதியவராகவும் இருக்கிறீர்கள். இது தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?‘’ என்று கேட்டார். அவரை நிமிர்ந்து பார்த்தார் முதியவர். பிறகு மெல்லிய புன்முறுவலுடன், ‘‘அப்படியா? சரி, கடவுள் எந்தத் திசையில் இல்லை என்று சொல்லுங்கள், அந்த திசை நோக்கி என் கால்களை நீட்டி வைத்துக்கொள்கிறேன்’’, என்றார்.

பளிச்சென்று அதிர்ந்தார் குறை கூறியவர். ‘இப்படிக் காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கிறீர்களே, இவ்வழியேசெல்லும் பிற பக்தர்களுக்கு இடையூறாக இருக்காதா?’ என்று கேட்டிருந்திருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டார். இந்த உண்மையை உணர்ந்துவிட்டால், எல்லாவற்றையும் பகவானுக்கே சமர்ப்பிப்பது எளிதாகிவிடும். பொதுவாகவே இவ்வாறு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் தயாபரனைக் குறிப்பிடும் பெரியவர்கள், ‘ஜாக்கிரதை கடவுள் உன்னை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.

அதனால் எந்தத் தவறும் செய்யாதே,’ என்று பயமுறுத்தத்தான் செய்கிறார்கள். அதற்கு பதிலாக, ‘ஒரு காற்றாகத் தழுவியபடி இறைவன் உன்னை சூழ்ந்திருக்கிறார். ஆகவே உன் எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றையும் அவனுக்கு அர்ப்பணம் செய்வதாகவே கருதிக் கொள்’ என்று அறிவுறுத்தினால் ஆக்கப்பூர்வமான விளைவுகள் உருவாகும், அல்லவா?

“அபானே ஜுஹ்வதி ப்ராணம் ப்ரணேபானம் ததாபரே
ப்ர்ணாபானகதீ ருத்த்வா ப்ராணாயாம ப்ராயணா’’ (4:29)

‘‘சில யோகிகள் தம் சுவாசத்தைக் கணிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தம் மூக்கினால் உள்ளிழுக்கும் காற்றையும், வெளியிடும் காற்றையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது, உள்ளிழுக்கும் பிராண வாயுவையும், வெளியிடும் அபான வாயுவையும் ஒன்றுக் கொண்டு ஆகுதி செய்யத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இரு வாயுக்களின் போக்கைக் கட்டுப்படுத்தி, பிராணாயாமத்தில் ஈடுபடும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.’’ பகவான் கிருஷ்ணர், யோகத்தின் இன்னொரு பிரிவை இந்த ஸ்லோகத்தின் மூலம் சொல்கிறார். அடங்காதது மனம், அதைப்போலவே எங்கும் வியாபித்திருப்பது காற்று. நிர்ச்சலனமான முகத்தோற்றம் கொண்ட ஒருவரது மனம், எவ்வாறெல்லாம் ஆர்ப்பரிக்கும் என்று அவருக்கு மட்டுமே தெரியும். அவருடைய முகத் தோற்றத்தைப் பார்த்து பிறரால் அவர் மனதை அனுமானிக்க முடியாது என்பதுதான் உண்மை.

அதேபோல, காற்று எங்கும் பரந்து வியாபித்திருக்கிறது. அது, சருமத்தால் உணரப்படாவிட்டாலும், நாசியால் இயல்பாக உள்ளிழுக்கப்படுவது, வெளியே விடப்படுவது. அத்தகைய சூட்சுமமானது காற்று என்ற வாயு. இடிபாடுகளுக்கிடையே பல நாட்கள் புதைந்திருக்கக்கூடிய ஒருவன், மீட்கப்படும்போது, உயிரோடு இருக்கிறான் என்றால், அந்த இடிபாடுகளுக்கிடையேயும் கொஞ்சம் காற்று அவனுடைய உயிரைத் தக்கவைக்க உதவியிருக்கிறது என்றுதானே அர்த்தம்! ஆக, அங்கும் காற்று இருக்கிறது! மனதுக்கும் இந்த வாயுவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதைத்தான் கிருஷ்ணர் இங்கே சுட்டிக்காட்டுகிறார்.

எதற்காகவாவது, எதனாலாவது பயம் ஏற்பட்டால், மனம் பாதிப்படைகிறது. கூடவே, அதுவரை சீராக இருந்த சுவாசமும் தடுமாறுகிறது. இயல்பாக ஓசையற்ற அந்த மூச்சு இயக்கம், ‘புஸ், புஸ்ஸெ’ன்று தாறுமாறானதாகிவிடுகிறது. ஆனால், ஒரு யோகியால், எந்த நிலையிலும் சுவாசத்தைச் சீராக வைத்திருக்கமுடியும், அதாவது, அவன் தன்னுடைய மனதை அலைபாயவிடாமல் வைத்திருக்கமுடியும்.

எல்லா நன்மை தீமைகளுக்கும், எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும், எல்லாமான அவமானங்களுக்கும் மனமே காரணம். இவை மட்டுமல்ல, இயல்பான சுவாச ஓட்டத்துக்கும் அதே மனம் காரணமாக இருக்கிறது! சந்தோஷத்தால் திகைக்கும்போதும், அச்சத்தால் ஓட நேரும்போதும் ‘மேல்மூச்சு, கீழ்மூச்சு’ வாங்குவது பலருடைய அனுபவமாக இருக்கிறது. இதில் மேல்மூச்சுதான் மூக்கால் உள்ளிழுக்கப்படும் காற்று, கீழ்மூச்சுதான் வெளியிடப்படும் காற்று.

ஆனால், சுவாசத்தை நேர்ப்படுத்துவதன் மூலம், மனதைக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் புரிந்துகொள்ளப்படவேண்டிய உண்மை. அதாவது, மனக்கட்டுப்பாட்டிற்கான உடல்ரீதியான முதல் பயிற்சி பிராணாயாமம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பிறருடைய அறிவுரை, ஆறுதல் எல்லாவற்றையும்விட சுயமாக ஒருவர் மேற்கொள்ளக் கூடிய எளிய பயிற்சி அது. இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, இதன் ஆரம்பக் கட்டத்திலேயே மனது ஒடுங்குவதை உணர முடியும்.

ஆமாம், உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியிடப்படும் காற்றிலேயே முழு கவனமும் பதிந்திருக்கும். உள்ளிழுக்கும் காற்றை எத்தனை விநாடிகள் நுரையீரலுக்குள் சிறைப் பிடித்து வைத்திருக்க முடியும், வெளியிட்டபின் எத்தனை விநாடிகள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளாமல் தாக்குப் பிடிக்க முடியும் என்று இந்தப் பயிற்சியின் பரிமாணம் விரிவடையும். இவ்வாறு காற்றை உள்ளிழுப்பதை ‘பூரகம்’ என்பார்கள்; வெளியிடுவதை ‘ரேசகம்’ என்பார்கள். நீண்டநேரம் மூச்சுக் காற்றை உள்ளே இருத்தி வைத்துக் கொள்வதையும், வெளியேற்றிய பிறகு நீண்டநேரம் உள்ளிழுக்காததையும் ‘கும்பகம்’ என்பார்கள். இந்த பூரக – ரேசக – கும்பகப் பயிற்சியையும் வெகு நிதானமாகவே செய்ய வேண்டும்; ஆர்வக் கோளாறாலோ, அதீத நம்பிக்கையாலோ இந்த மூன்று முறைகளிலும் கால அளவின் எல்லையை மீறினால் அது உடலுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடும் என்றும் எச்சரிப்பார்கள்.

இப்படி நிதானமாக, சீராக, பிராணாயாமப் பயிற்சியை மேற்கொள்ளும் ஒரு யோகிக்கு அது இயல்பான சுவாசமாகவே அமைந்துவிடுகிறது. நன்றாக நடக்கக் கூடியவர், தன் கால்களைப் பற்றிய உணர்வே இல்லாமல், எந்தப் பிரச்னையுமின்றி நடந்துசெல்வதைப் போல! பிராணாயாமப் பயிற்சியால், சுவாசம் சீராக அமையக் கூடிய ஒருவருக்கு மனது தெளிவாகிறது. அவருடைய மனம் உணர்வுகளுக்கு அடிமையாவதில்லை. எத்தனை பெரிய பலன் தரும் அற்புதமான பயிற்சி இது! மனம் மட்டு மல்லாமல் மூளையும் புத்துணர்வு பெறும் ஆக்கப்பூர்வமான பயிற்சி.

ஒருவருக்குக் கோபம் ஏற்பட்டால், அவர் உடனே கோபவிளைவுகளைக் காட்டாமல், சில விநாடிகள் மூச்சடக்கி, பிறகு அதை மெல்ல வெளியே விடுவாரானால், அவருடைய கோபமும் அந்த மூச்சுக் காற்றோடு வெளியேறிவிடும் என்பார்கள். இவ்வாறு கோபத்தை வெளிக்காட்டாவிட்டால், நாம் ஏமாந்தவர்களாகி விடுவோமோ என்ற கேள்வி தோன்றுவதும் இயற்கையே. ஆனால் மூச்சடக்கி, கோபத்தையும் அடக்கியவர்கள், பின்விளைவுகளைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், அவர்களால் நன்மையையும், தீமையையும் ஒன்றேபோல பாவிக்க முடியும். நல்லன வந்தாலோ, நல்லன அல்லாதவை வந்தாலோ அவர்களால் மனக் கிலேசம் அடையாமல் இருக்க முடியும். தேவைப்பட்ட இடத்தில், தேவைப்பட்ட நேரத்தில் அவர்களால் தம் ஆக்கபூர்வமான வலிமையை கோபத்தால் காட்ட முடியும். அதேபோல, அடங்கிப் போகவும் இயலும்.

நிதானமான சுவாசம், மனதை அமைதிப் படுத்துவதோடு, ரத்தக் கொதிப்பையும் உண்டாக்குவதில்லை, பிற எந்த உடற்கூறு பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது இக்காலத்திய அனுபவ உண்மை. இதனை கிருஷ்ணன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டார். அர்ஜுனனுக்கு அறிவுறுத்தும் விதமாக, ஒரு யோகியை உதாரணமாகக் காட்டி, அந்த யோகியைப் போல நல்ல மனநலனும், உடல்நலனும் பெறுமாறு போதித்திருக்கிறார்.

யாருக்கெல்லாம் சுவாசக் கட்டுப்பாடு கைவருகிறதோ, அவருக்கு மனக்கட்டுப்பாடும் எளிதாகும். அவருடைய கோபத்தில் நியாயம் இருக்கும், ஆனால் விபரீத பின் விளைவுகள் இருக்காது. ஆக்கபூர்வமான சிந்தனைகளும், செயல்களும் அவற்றால் பொதுநலனும் உண்டாகும். இந்த மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்)யின் தொடர்ச்சிதான் தியானம். மூச்சை உள்ளிழுப்பதற்கும், வெளியே விடுவதற்கும் இடைப்பட்ட சில விநாடிகள் மற்றும் அதேபோல வெளியே விடுவதற்கும், உள்ளிழுப்பதற்கும் இடைப்பட்ட சில விநாடிகள் இவற்றை ஆழ்நிலைத் தியானத்தின் ஆரம்பம் என்று சொல்லலாம். இப்படி சுவாசம் நிற்கும் விநாடிகளில், ‘பரம’ ஆனந்த நிலை ஏற்படுகிறது.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இந்நிலையை பலமுறை எட்டியவர் என்று சொல்வார்கள். சில சமயங்களில் நாலைந்து நாட்களுக்குக்கூட அவர் அப்படியே உணர்வற்றுக் கிடப்பாராம். சுற்றி நிற்பவர்கள் திகைத்துப் போவார்கள். அவருடலில் உயிர் இருக்கிறதா என்ற சந்தேகமும் வந்துவிடும். மெல்ல அவர் உடலை ஸ்பரிசிக்கும்போது அது சூடாக இருப்பதிலிருந்து அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று நிம்மதியடைவார்களாம். வெகு நாட்கள் நீடிக்கும் அந்த சில சமயங்களில் ‘‘அவரை ‘எழுப்ப’ வேண்டியிருக்கும்’’ என்பார்கள் அவரது சீடர்கள்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post மூச்சை அடக்கினால் மனது அடங்கும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்