×

மேட்டுப்பாளையம் அருகே அரசு பள்ளி கேட்டை உடைத்த பாகுபலி யானை

 

மேட்டுப்பாளையம், மார்ச் 14: மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானை அரசு பள்ளியின் கேட்டை உடைத்து, சுற்றுச்சுவரை தாண்டி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, ஊமப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது, கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருகின்றன. நேற்று முன்தினம் இரவு பாகுபலி யானை கோத்தகிரி சாலையை கடந்து ஊமப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே சென்றுள்ளது. பின்னர், அங்கிருந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கேட்டை உடைத்து தள்ளி உள்ளே நுழைந்த பாகுபலி யானை, அங்கிருந்த கூந்தப்பனை மரத்தின் கிளைகளை ருசி பார்த்தது.

இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து மெதுவாக நகர்ந்த பாகுபலி யானை பள்ளியின் சுற்றுச்சுவரை லாவகமாக தாண்டி அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், சற்றுநேரத்தில் பாகுபலி யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. பள்ளியின் சுற்றுச்சுவரை பாகுபலி யானை லாவகமாக தாண்டிச்செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post மேட்டுப்பாளையம் அருகே அரசு பள்ளி கேட்டை உடைத்த பாகுபலி யானை appeared first on Dinakaran.

Tags : Baahubali ,Mettupalayam ,Thekambatti ,Nellithurai ,Odanthurai ,Oomappalayam ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது