×

மதுராந்தகம் நகருக்குள் பகல் நேரங்களில் தடையை மீறி செல்லும் கல்குவாரி லாரிகள்: n பொதுமக்கள் அச்சம் n நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுராந்தகம், மார்ச் 14: மதுராந்தகம் நகருக்குள் பகல் நேரங்களில் தடையை மீறி கல்குவாரி லாரிகள் செல்கின்றன. இதனால், பொதுமக்கள், மாணவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரை சுற்றியுள்ள செய்யூர், தச்சூர், சித்தாமூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கல்குவாரிகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி இரவு பகலாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து கற்கள், ஜல்லி போன்றவற்றை ஏற்றிக்கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன. இதனால், மதுராந்தகம் நகரில் பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், சாலையில் புழுதியை கிளப்பியவாரும், அதிகளவில் கற்களை ஏற்றிக்கொண்டு கனரக லாரிகள் அதிவேகமாக செல்வதால், கற்கள் உருண்டு கீழே விழுவது, சாலையை அடைத்து கொண்டு வரும் பெரிய பெரிய கனரக லாரிகளால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகல் நேரங்களில் மதுராந்தகம் நகருக்குள், கனரக வாகனங்கள் வரக்கூடாது என போக்குவரத்து காவல் துறையினர் அறிவிப்பு பலகை அறிவித்திருந்தனர். இதனால், ஓரளவுக்கு இந்த லாரிகளின் பகல் நேர போக்குவரத்து மதுராந்தகம் நகரில் குறைந்து காணப்பட்டன. ஆனால், தற்போது பழைய நிலையிலேயே காலை முதல் அனைத்து நேரங்களிலும் இந்த லாரிகள் மதுராந்தகம் நகருக்குள் செல்கின்றன. சட்ட விதிமுறைகளை மீறி செல்லும் பல கனரக லாரிகளின் பின்புறங்களில் நம்பர் பிளேட் இருப்பதில்லை. ஏனென்றால் அதனை போட்டோ வீடியோ எடுத்து பொதுமக்கள் புகார் அளித்து விடுவார்கள் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மதுராந்தகம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள் அச்சத்துடனே சாலையில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு அதிகாரிகள் பகல் நேரங்களில் கனரக லாரிகள் மதுராந்தகம் நகருக்குள் வருவதை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து மதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனிடம் கேட்டபோது, ‘கனரக லாரிகள் மதுராந்தகம் நகருக்குள் வரகூடாது என தடை விதித்து போர்டு வைத்துள்ளோம். மேலும், அதனையும் மீறி இரவு நகருக்குள் வரும் லாரிகளை வருவதாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகார் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. நாங்களும் லாரிகள் உள்ளே வருகிறதான என கண்காணித்து வருகின்றோம். அப்படி வரும் லாரிகளை பிடித்து எச்சரித்து அனுப்புகிறோம். அதையும் மீறி வரும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

கடுமையான நடவடிக்கை
மதுராந்தகம் நகருக்குள் பகல் நேரங்களில் கல்குவாரி லாரிகள் செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசாரல் நகரின் நுழைவு பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு பலகைகள் வைத்த சில நாட்கள் கல்குவாரி லாரிகள் உள்ளே வராமல் இருந்தன. கடந்த சில நாட்களாக மீண்டும் கல்குவாரி லாரிகள் லோடுகளை ஏற்றி கொண்டு செல்வது வழக்கபோல் தொடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் அதிகம் செல்லுக்கூடிய சாலைகளில் பாறாங்கற்கள் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

போக்குவரத்து நெரிசல்
பள்ளி நாட்கள், திங்கள் தோறும் நடைபெறும் வார சந்தை ஆகிய நாட்களில் போக்குரவத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த கல்குவாரி லாரிகள் செல்லும்போது, மருத்துவமனை சந்திப்பில் இருந்து வரிசை கட்டி சாலையில் வாகனங்கள் நிற்கின்றன. அப்போது, பல்வேறு வேலை காரணமாக செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சாலையை செல்லவோ, கடக்கவோ மிகவும் சிரமாக இருக்கும். இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகின்றனர்.

விபத்து ஏற்பட வாய்ப்பு
மதுராந்தகத்தில் ஆஸ்பிட்டல் ரோட்டில் பள்ளிகள் உள்ளன. இந்த சாலை வழியாக செல்லும்போது, பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அச்சத்ததுடனே செல்கின்றனர். சாலையில் ஒருநாள் பாறாங் கற்கள் ஏற்றி சென்ற லாரியில் இருந்து பாறாங்கல் ஒன்று விழுந்து விட்டது. அப்போது, அதிஷ்டவசமாக அப்பகுதியில் மாணவர்கள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபோல் அனைத்து நேரத்திலும் விபத்து தவிர்க்கப்படும் என கூற முடியாது. கல்குவாரி லாரிகள் மீண்டும் செல்ல ஆரம்பித்துள்ள நிலையில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் கல்குவாரி லாரிகள் செல்வதை தடுத்து நிறுத்தி வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post மதுராந்தகம் நகருக்குள் பகல் நேரங்களில் தடையை மீறி செல்லும் கல்குவாரி லாரிகள்: n பொதுமக்கள் அச்சம் n நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Madurathangam city ,Madhurandakam ,Maduraandakam ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை