×

கூட்டணி வைக்கிறேன் சொல்லிட்டு கட்சியையே ஊத்தி மூடிட்டாரு: கட்சிக்காரங்களே கலாய்க்கும் ஒரே தலைவர் ‘சின்ராசு’தான்

1990களில் நடிகர் சரத்குமார் திரை நட்சத்திரமாக மின்னிய காலத்திலேயே, தென்மாவட்டங்களில் அவருக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அவர் நடித்த சூரியன், சேரன்பாண்டியன், சாமுண்டி, நாட்டாமை, சூர்ய வம்சம் உள்ளிட்ட படங்கள் தென்மாவட்டங்களில் வசூலை வாரி குவித்தன. அதிலும் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் கிராமங்களில் சுபநிகழ்வுகள் எதுவாயினும் சரத்குமாரின் திரையிசை பாடல்கள் ஊரெல்லாம் ஒலித்தன. பின்னாளில் அவர் அரசியல் கட்சியை தொடங்கிய போதும் தென்மாவட்டங்களே அவருக்கு துணை நின்றன.

1996ம் ஆண்டு திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பிரசாரம் செய்தார். அதற்கு கைமேல் பலனாக 1998ம் ஆண்டில் மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிட்டியது. இப்போது போல் அல்லாமல் அன்றைய நெல்லை மக்களவை தொகுதியில் தூத்துக்குடி சட்டசபை தொகுதியும் இடம்பெற்றிருந்தது. அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து திமுக 2001ம் ஆண்டு அவரை ராஜ்யசபா உறுப்பினராக்கி அழகு பார்த்தது. 2006ம் ஆண்டு மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார். சிறிது காலத்தில் அதிமுகவில் இருந்து ராதிகா நீக்கப்பட்டார்.

இதனால், சரத்குமாரும் அதிமுகவில் இருந்து வெளியேறி 2007ம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். சரத்குமாரின் கட்சியில் தென்மாவட்டங்களில், அதிலும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் இணைந்தனர்.

சரத்குமாருக்கு பாஜ மீதான பாசம் இன்று மட்டுமல்ல, அன்றும் ஓரளவுக்கு இருந்தது என்றே கூற வேண்டும். தாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே 2009ம் மக்களவை தேர்தலில் அவர் பாஜவோடு இணைந்தே போட்டியிட்டார். இருப்பினும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் கூட்டணி மாறினார்.

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சரத்குமார் தென்காசி தொகுதியிலும், அப்போது அவருக்கு வலது கரமாக இருந்த எர்ணாவூர் நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினர். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றினாலும், அவர் அக்கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021ம் ஆண்டிலும் கூட நடிகர் கமலோடு கூட்டணி வைத்து போட்டியிட்டு தோல்விகளையே எதிர்கொண்டார்.

இதனால் இந்த முறை யார் பக்கம் செல்லலாம் என்று நிர்வாகிகளுடம் ஆலோசனை நடத்திவிட்டு சொல்கிறேன் என்று நாட்களை கடத்தி வந்தார். இந்த கூட்டத்தில் சரத்குமார் எண்ணம் ஒரு விதமாகவும், நிர்வாகிகள் எண்ணம் ஒரு விதமாக இருந்தது. சரத்குமார் பாஜவுக்கு தாவ ஆசைப்பட்டார். ஆனா நிர்வாகிகளோ அதிமுகவுடன் செல்லலாம் என்று கூறி வந்தனர்.

கூட்டணிக்காக அலையும் இரண்டு கட்சிகளும் அழைப்பு விடுத்ததால், தேர்தல் முடிவே சரத்குமாரால்தான் வைத்துதான் வரபோகிறது என்ற ரேஞ்சில் பெரிய பில்டப் செய்தார். அதற்கேற்ப நெல்லையில் தென்மண்டல பிரதிநிதிகள் கூட்டத்தை, மாநாடு போல நடத்தி, ‘தமிழ்நாட்டில் நானும் ஒரு நாள் முதல்வராக மாறுவேன்’ என பிரகடனப்படுத்திக் கொண்டார்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு ஒரு ரவுண்டு அடித்துவிட்டதால் திரும்பி அங்கேயே எப்படி போகிறது என்று திசை தெரியாமல் 3% சதவீதம் வாக்கு உள்ள பாஜவை தூக்கி பிடிக்க சென்றுவிட்டார். கூட்டணி சேர போறேன்னு அறிவிச்சாருங்க… திடீரெனு மிட் நைட் 2 மணிக்கு பாஜவுடன் இணைய நினைக்கிறேன் என்று மனைவிக்கு கேட்டாராம். அவங்களும் நீங்கள் கரெக்டாதான் முடிவு எடுப்பீங்கனு சொன்னாங்களாம்..

மறுநாள் பாஜவில் சேர்ந்திட்டாராம் நாட்டாமை… இதில் என்ன ஹைலைட்டுனா சரத்குமாரை தவிரா யாரும் கூட போகல… ‘நாட்டாமை வேணும்னா போகட்டும்… ரோஷம் உள்ள யாரும் பாஜவுக்கு போக மாட்டாங்க…’ என சமகவில் இருந்து கொஞ்ச நஞ்ச நிர்வாகிகள் போயும், போயும் பாஜவில் கொண்டு போய் கட்சியை இணைத்ததை ஜீரணிக்க முடியாம பொங்கி எழுந்து உள்ளனர். நாட்டாமை தீர்ப்பு மாற்றி எழுதுவாருனு தெரியும். ஆனால் இப்படி அரசியல் வாழ்க்கையே க்ளோஸ் பண்ணிவிட்டாருனு பீல் பண்ணிட்டு இருக்காங்க… ஆனா நாட்டாமையோ என் மனைவியை கேட்டுட்டு போனேன்… என் மாமியார் ஆசைப்பட்டாங்கனு போகிற இடமெல்லாம் ஒரு ஒரு கதையை சொல்லிட்டு வர்றாரு… இதை வெச்சு கட்சிக்காரங்களே சரத்குமார்-பாஜவை கலாய்த்து மீம்ஸ்களை ஷேர் செய்து தெறிக்க விடுகின்றனர்.

 

The post கூட்டணி வைக்கிறேன் சொல்லிட்டு கட்சியையே ஊத்தி மூடிட்டாரு: கட்சிக்காரங்களே கலாய்க்கும் ஒரே தலைவர் ‘சின்ராசு’தான் appeared first on Dinakaran.

Tags : Sarathkumar ,Cheranpandiyan ,Sinrasu ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...