×

கொலையை கொண்டாடும் வகையில் ‘தம்ஸ் அப்’ போட்டதாக காவலரின் பணி நீக்கம் ஏற்புடையதல்ல: ரயில்வே டிஜிபியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: ‘கொலையை கொண்டாடும் வகையில் ‘தம்ஸ் அப்’ போட்டதாக காவலரின் பணி நீக்கம் ஏற்புடையதல்ல’ என்று கூறி ரயில்வே டிஜிபியின் மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தம்ஸ்அப் குறியீடு ஓகே என்பதால் ரயில்வே காவலரை பணி நீக்கம் செய்தது ஏற்புடையதல்ல என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. கடந்த 2017ல் ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டர், காவலர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான செய்தி ரயில்வே பாதுகாப்பு படையின் அலுவலக வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது.

இதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் நரேந்திரசவுகான், தம்ஸ்அப் குறியீட்டை பின்னூட்டமாக பதிவிட்டார். இது, உயர் அதிகாரி கொலையை கொண்டாடும் விதமாக இருப்பதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சவுகான், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ரயில்வே பாதுகாப்பு படை டிஜிபி, ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: தம்ஸ் அப் குறியீடு என்பது ஓகே என்பதன் மாற்று குறியீடு ஆகும். தம்ஸ்அப் குறியீட்டை அதிகாரியின் கொடூர கொலையை கொண்டாடுவதற்கான குறியீடாக கருத முடியாது. மேலும், கொலை செய்தியை மனுதாரர் அனுப்பவில்லை. வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவலை பார்த்து, அந்த தகவலை பார்த்துவிட்டதற்கான அத்தாட்சியாக தம்ஸ் அப் குறியீட்டை பதிவிட்டுள்ளார். மனுதாரர் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லை. மனுதாரரின் விளக்கம் ஏற்புடையதாகவே இருக்கிறது. எனவே மனுதாரரின் பணி நீக்கத்தை ஏற்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

The post கொலையை கொண்டாடும் வகையில் ‘தம்ஸ் அப்’ போட்டதாக காவலரின் பணி நீக்கம் ஏற்புடையதல்ல: ரயில்வே டிஜிபியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Court ,Railway DGP ,Madurai ,High Court ,ICourt Branch ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...