×

கரும்பு தோட்டத்தில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு; பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை?: தண்டராம்பட்டு அருகே இன்று பரபரப்பு

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் இன்று மீட்கப்பட்டது. அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல், விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இதன் அறுவடை பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இப்பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கூலி தொழிலாளர்கள் அறுவடை பணிக்கு வந்தனர். அப்போது கரும்பு தோட்டத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள் கரும்பு தோட்டத்தின் மையப்பகுதியில் சென்று பார்த்தனர். அப்போது நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக நிலத்தின் உரிமையாளர் பழனிவேல் மூலம் விஏஓ ஆனந்தனுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் தகவலறிந்த தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், எஸ்ஐ பிரசாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலமாக கிடந்த பெண்ணிற்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கரும்பு தோட்டத்தின் அருகே திருவண்ணாமலை-அரூர் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள இந்த கரும்பு தோட்டத்தில் இளம்பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் வாகனத்தில் கடத்தி வந்து பலாத்காரம் செய்து கொன்றார்களா? கொலையாளிகள் யார் என விசாரித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் சில தனியார் கடைகளில் கடந்த சில வாரங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கரும்பு தோட்டத்தில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு; பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை?: தண்டராம்பட்டு அருகே இன்று பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Thandarampattu ,Palanivel ,Radhapuram ,Thandarampatu ,Tiruvannamalai ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறிய...