நாகை: நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. ஆலை விரிவாக்கத்திற்காக ரூ.31 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு பனங்குடியை சுற்றி 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பனங்குடியில் ஜனவரி மாதம் 29ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சிபிசிஎல் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணி மேற்கொண்டனர். அப்போது நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் நிலம் அளவீடு செய்யக்கூடாது என அப்பகுதி விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் நேற்று விவசாயிகள், நில உரிமைதாரர்கள், சாகுபடிதாரர்கள், கூலித் தொழிலாளர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தங்களது வீடுகளில் பதாகைகள் வைத்தும் கருப்புக்கொடி ஏற்றியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு 2013ம் ஆண்டு இழப்பீடு சட்டத்தின்படி மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின்படி சாகுபடிதாரர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், நில உரிமைதாரர்களுக்கு சிலருக்கு நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் உள்ளது. அதை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம், முட்டம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சாகுபடிதாரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
The post எண்ணெய் நிறுவனம் கண்டித்து 5 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிக்க முடிவு appeared first on Dinakaran.