×

திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (13.03.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, ஏணி, ஒட்டடை குச்சி, துடைப்பம், தண்ணீர் பீச்சும் இயந்திரம் மற்றும் குழாய்கள், சலவைப் பொருட்கள் / தூய்மைப் பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், தூய்மையை பராமரித்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்ற புதிய திட்டங்களை கடந்த 33 மாதங்களில் தன்னுடைய மதிநுட்பத்தால் செயல்படுத்துகின்ற மகத்தான முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.

அப்பர் என்று அழைக்கப்படுகின்ற திருநாவுக்கரசர் உழவாரம் என்ற கருவியைக் கொண்டு நாடு முழுவதும் இருக்கின்ற திருக்கோயில்களின் உழவாரப்பணியில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்டவராவார். சோழர் காலத்தில் திருக்கோயில்களில் இப்படிப்பட்ட திருப்பணிகளும், பராமரிப்பும் பெருமளவு மேற்கொள்ளப்பட்டதை போல் அதற்கிணையாக இன்றைய முதலமைச்சர் தளபதி தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சி திருக்கோயில்களின் புனரமைப்பிற்கும் தேவைகளை நிறைவேற்றுவதிலும் முன்மாதிரியான ஒரு அரசாக திகழ்கிறது.

உழவாரப் பணி என்பது தொன்று தொட்டு மக்கள் செய்து வருகின்ற பணி என்றாலும் அதனை மேற்கொள்கின்ற அடியார்களுக்கு, தன்னார்வலர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். நந்தீஸ்வரர் உழவாரப்பணி குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டம், சீத்தணாஞ்சேரியில் 2022 ஆம் ஆண்டு தங்களுடைய நூறாவது உழவாரப் பணியை தொடங்குகின்ற நிகழ்வில் துறையின் அமைச்சர் என்ற வகையில் நான் கலந்து கொண்டேன். அன்றைக்கு தான் இந்த உழவாரப் பணியால் கிடைக்கின்ற நன்மைகளை முழுவதுமாக நானே உணர்ந்தேன். அக்குழுவினரின் பணி தொடர்ந்து 124 வது உழவாரப் பணியை அரக்கோணம் வட்டம், தக்கோலம் திருக்கோயிலில் ஏப்ரல் மாதம் மேற்கொள்ள இருக்கின்றார்கள். நந்தீஸ்வரர் உழவாரப் பணி குழுவிற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடியார்களாலும், தன்னார்வலர்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற உழவாரப் பணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்குட்பட்ட 5 திருக்கோயில்களுக்கு முதற்கட்டமாக உழவாரப்பணி மேற்கொள்வதற்குண்டான 12 வகையான உபகரணங்களை கட்டணமில்லாமல் வழங்குகின்றோம். உழவாரப்பணி முடிந்தவுடன் திரும்பவும் திருக்கோயிலிலேயே ஒப்படைத்து விட வேண்டும்.

உழவாரப் பணியில் ஈடுபடுகின்ற அன்பர்களுக்கு தேனீர் மற்றும் காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும் என்றும், உழவாரப்பணி மேற்கொள்பவர்களுக்கு துறையின் சார்பில் அந்தந்த இணை ஆணையர்கள் மூலம் நற்சான்றிதழ் வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இறை நம்பிக்கையோடு செய்கின்ற, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மை உள்ளத்தோடு ஆலயங்களை தூய்மைப்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு இருக்கின்ற உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நிச்சயம் ஆண்டவனால் வழங்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தளவில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்பதில் தனி முத்திரையை இந்த திராவிட மாடல் அரசு பதித்திருக்கின்றது. அதற்காக 38 மாவட்டங்களுக்கும் தனி வட்டாட்சியாளர்களை பணி நியமனம் செய்திருக்கின்றோம். இதுவரையில் ரூ.5,979 கோடி மதிப்பிலான 6,810 ஏக்கர் சொத்துக்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 1,477 குடமுழுக்குகள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நடந்திருக்கிறது.

அதேபோல 5,000 கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதியாண்டிற்கு 2,500 திருக்கோயில்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கால பூஜை திட்டத்தில் இதுவரை 17,000 திருக்கோயில்கள் இணைக்கப்பட்டு அதன் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவுகளின்படி பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ளவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 நாட்கள் நடைபெறுகின்ற இம்மாநாட்டில் முருகப்பெருமானின் பெருமைகளை விளக்கும் கண்காட்சி அமைத்திடவும், சிறப்பு மலர் வெளியிடவும், ஆன்மிக சொற்பொழிவுகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இம்மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நிச்சயம் அமையும். அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல திருக்கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

திமுகவின் நிலைப்பாடு எப்போதும் எதையும் எதிர்கொள்வது தான். உள்ளதை சொல்வது, சொல்வதை செய்வது என்பது திமுகவின் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருப்போம். தமிழக அரசியல் வரலாற்றில் பல்வேறு வகையில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்தாலும், அமலாக்கத்துறை, வருவான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை ஏவுகணைகளாக பயன்படுத்தினாலும் எதற்கும் அஞ்சாமல் எதிர்கொள்ளுகின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம், தலைவர் இரும்பு மனிதர் தளபதி . ஆகவே எதற்கும் இந்த ஆட்சியும் இந்த இயக்கமும் பயப்படாது.

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் நேற்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு கிடைத்திருக்கின்றது. திருக்கோயிலில் மேற்கொள்ளப்படுகின்ற திருப்பணிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை முழுமையாக விவரித்து திருப்பணிகளும், இதர பணிகளும் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை துறையின் சார்பில் விளக்கமாக எடுத்துக் கூறியதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திலும், அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு வகையில் இறை தொடர்பான பணிகளை ஆற்றுவதற்கு தடை செய்திட வேண்டும் என்று பல்வேறு வழிகளில் ஒரு கூட்டம் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றது. அந்த முயற்சிகளை எல்லாம் தகர்த்தெறிந்து முதலமைச்சர் இது அனைவருக்குமான ஆட்சி, எல்லோருக்கும் எல்லாம் என்பதனை தொடர்ந்து தனது பணிகளின் வாயிலாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், கி.ரேணுகாதேவி, திருக்கோயில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbhabu ,Chief Minister ,Tamil Nadu ,K. ,Stalin ,P. K. Shekarbabu ,Arulmigu Hanishwarar Temple ,Thiruvanmiur, Chennai, Chennai ,Sekarbabu ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...