×

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி, வீட்டு வரியில் விலக்கு: அரசாணை வெளியீடு

சென்னை: நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் வீட்டு வரியில் விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 1.20 லட்சம் வீரர்கள் பயனடைவார்கள்.

2024-2025ம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்ட மதிப்பீடு அறிக்கையை சட்டபேரவையில் கடந்த மாதம் 19ம் தேதி நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வரி விலக்கு தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதன்படி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வரி விலக்கு தொடர்பாக தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:
‘‘தாய்நாட்டிற்காக நம் நாட்டின் எல்லைகளில், பல்வேறு கடினமான சூழல்களில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடும் நோக்குடன் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் நமது முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வீட்டுவரித் தொகையினை திரும்ப பெறும் சலுகை, தற்போது கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற படைவீரர் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதன்படி, வரக்கூடிய நிதியாண்டிலிருந்து குடியிருப்புகள், சொத்துவரி, வீட்டுவரித் தொகையினை திரும்ப பெறும் இத்திட்டத்தினை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்கிட ஆவணம் செய்யப்படும். இதனால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் பயன் பெறுவர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி விலக்கு பெறும் வீரர்களுக்கான நிபந்தனைகள்:
* முன்னாள் படைவீரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.
* முன்னாள் படைவீரர்களின் சொந்த வீட்டிற்கு, அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை பொருந்தும்.
* முன்னாள் படைவீரர் வருமானவரி செலுத்துபவராக இருத்தல் கூடாது.
* ராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்றப்பின் மறு வேலைவாய்ப்பு முறையில் தமிழ்நாடு அரசு துறைகள், ஒன்றிய அரசு பணிகள், ஒன்றிய – மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறுவேலைவாய்ப்பு பணியில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களாக இருத்தல் கூடாது.

The post நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி, வீட்டு வரியில் விலக்கு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...