×

மண்டல வாரியான தேர்வு முறையை ஒழித்து கட்டிய ஒன்றிய பாஜ அரசு; இந்தி பேசும் மாநிலங்களில் இருந்தே 90 சதவீத பணி நியமனங்கள்: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை சாக்காக வைத்துக் கொண்டு மண்டல வாரியான தேர்வு முறையை ஒழித்துக் கட்டியுள்ளது. இதன் விளைவாக தேர்வுகள் அனைத்தும் டெல்லியில் நடத்துகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலமாக 90 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தே பணி நியமனங்கள் நடைபெறுகிறது. தென்மாநிலங்களில் இருந்து பெயரளவுக்கு 5 அல்லது 10 சதவிகிதத்தினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். ஒன்றிய பாஜ அரசின் இத்தகைய தவறான அணுகுமுறையின் காரணமாக, பணியாளர் தேர்வாணையத்தினால் ஒன்றிய அரசின் அலுவலகங்களின் தன்மையே முற்றிலும் மாறியிருக்கிறது.

உதாரணமாக, சி.ஏ.ஜி. தலைமையிலான கணக்கு தணிக்கை அலுவலகத்தை எடுத்துக் கொண்டால் அந்த அலுவலகங்களில் அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள பணியே கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தணிக்கை அலுவலகத்தின் பணி என்னவென்றால், தமிழ்நாடு முழுவதும் சென்று மாநில அரசு அலுவலகங்களில் தணிக்கை செய்து அறிக்கையை ஆளுநர் மூலமாக சட்டசபையில் சமர்ப்பிப்பதாகும். மாநில கணக்காயர் கட்டுப்பாட்டில் மண்டல கணக்காயர் என்று ஒரு பிரிவு உண்டு. அவர்கள் மாநில அரசின் பொதுத்துறை பிரிவுகளில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு கணக்கையும் ஆய்வு செய்து கையெழுத்திட்டால் தான் அது ஏற்கப்படும். இந்த பதவிகளில் சரிபாதிக்கு மேல் இந்தி பேசும் மாநில ஊழியர்கள் தான் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பணியாற்றும் இந்தி பேசும் பணியாளர்கள் தமிழே தெரியாமல் எப்படி கணக்கு தணிக்கையை ஆய்வு செய்ய முடியும்?.

மேலும், இவ்வாறு பணியில் அமர்பவர்களுக்கு மொழி, கலாச்சாரம், பருவநிலை என பல சிக்கல்கள் இருப்பதால் இங்கு குடியேற சிரமப்படுவதோடு, பணியில் சேருபவர்களில் பெரும்பாலானோர் அடுத்தடுத்து தேர்வுகளை எழுதி தமது மாநிலங்களுக்கு திரும்பி சென்று விடுகின்றனர். இந்தி மொழியில் தேர்வு எழுதி தேர்வு பெற்றவர்கள் தமிழகம் போன்ற மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டால் நிர்வாகச் சிக்கல் தான் ஏற்படும் என்பதை ஒன்றிய பாஜ அரசு உணர வேண்டும்.

சமீபத்தில், பணியாளர் தேர்வாணையத்தில் ஜூன் 2024 முதல் ஜூலைக்குள் 41,233 காலிப் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகிறோம். இந்த கோரிக்கையை ஏற்பதன் மூலம், ஒன்றிய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களே பணியில் நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில், ஜவஹர்லால் நேருவின் உறுதிமொழியின் படியும், இந்திய ஆட்சி மொழிகள் சட்ட திருத்தத்தின் படியும் இந்தி பேசாத மாநில மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி பறிக்கப்படுவதையும் எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மண்டல வாரியான தேர்வு முறையை ஒழித்து கட்டிய ஒன்றிய பாஜ அரசு; இந்தி பேசும் மாநிலங்களில் இருந்தே 90 சதவீத பணி நியமனங்கள்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Selvaperundagai ,Chennai ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthagai ,Union Government Staff Selection Commission ,Supreme Court ,Delhi ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்