×

விராலிமலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்பு தானம்

*அரசு மரியாதையுடன் அடக்கம்

விராவிமலை,மார்ச் 13: விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த விராலிமலை பெண்ணின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலில் இருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்தவர் கண்ணையா மகன் சுப்பிரமணி (27) இவர் கடந்த 5 வருடத்திற்கு முன்பு சுஷ்மிதா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹரிணி (4) என்ற பெண் குழந்தை உள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சுப்பிரமணி புதுக்கோட்டை பெரியார் நகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.

கடந்த 10ம் தேதி இரவு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்று விட்டு பைக்கில் மனைவி மகளுடன் வீட்டுக்கு சென்றார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே சென்ற போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து பைக் மீது மோதியது. இதில் சுப்பிரமணி, ஹரிணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவின்றி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுஷ்மிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மூளை சாவு அடைந்த சுஷ்மிதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து கல்லீரல், இருதயம், தோல், கார்னியா, சிறுநீரகம் உள்ளிட்டவைகள் மருத்துவர்கள் துணையோடு சுஷ்மிதாவின் உடலில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த சுஷ்மிதாவின் சடலம் கணவரின் சொந்த ஊரான விராலிமலை கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அரசு சார்பில் ஆர்டிஓ தெய்வநாயகி, தாசில்தார் கருப்பையா ஆகியோர் சுஷ்மிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

The post விராலிமலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்பு தானம் appeared first on Dinakaran.

Tags : Viralimalai accident ,Viravimalai ,Trichy ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்