×

வாலாஜா பஸ்நிலையம் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பேருந்துகள் நிறுத்த மாற்று இடம் ஏற்பாடு

*நகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை : வாலாஜா பஸ்நிலையம் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்துகள் நிறுத்த மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் அறுவுறுத்தினார்.ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நெமிலி வட்டம், மாகாணிப்பட்டு கிராமம் மற்றும் கன்னிகாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்களை மாற்ற வேண்டும். சயனபுரம், சேந்தமங்கலம், பனப்பாக்கம், அகவலம் மற்றும் ரெட்டிவலம் கிராமங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்கம்பங்களில் கட்டியுள்ள பேனர்களை அகற்றுவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள காவேரிப்பாக்கம் மின்சார செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

வாலாஜா வட்டம் நரசிங்கபுரம், லாடம் தெருவிற்கு செல்லும் வழி தனியாருக்கு சொந்தமானது என கூறி தடுப்பதால் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்துத்தர பிடிஓ அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்திடுமாறு அறிவுறுத்தினார்.காவேரிப்பாக்கம் ஏரிக்கால்வாயில் கடப்பேரி அருகில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஏரிக்கால்வாயை சுத்தப்படுத்தவும் கோட்டப் பொறியாளர், மாசுகட்டுப்பாட்டு துறை, உதவி இயக்குநர், ஊராட்சிகள் மற்றும் செயற் பொறியாளர், நீர்வளஆதாரத் துறை ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

அரக்கோணம், தக்கோலம், நெமிலி, ஓச்சேரி மற்றும் பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நடைபெறும் போலி பெயிண்ட் விற்பனையை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள மாசுகட்டுப்பாட்டுத்துறை கோட்டப் பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.வாலாஜா வட்டம், பெல் புறவழிச்சாலை, அக்ராவரம் ரயில்வே மேம்பாலம் அருகில் அக்ராவரத்திலிருந்து வரும் வாகனங்கள், வேகமாக புறவழிச்சாலையில் நுழைந்து விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனால் வேகத்தை கட்டுப்படுத்த அக்ராவரத்திலிருந்து வரும் இணைப்பு சாலையில் வேகத்தடை அமைப்பது குறித்தும், தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா சுங்கசாவடியை அடுத்தும், ஓச்சேரியை அடுத்தும் உள்ள மாற்றுப்பாதைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சரிசெய்வது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற் பொறியாளர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அலுவலர் ஆகியோர்களை கேட்டுக்கொண்டார். வாலாஜா பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்துகள் நிறுத்த மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்வது குறித்து நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.

சோளிங்கர் வட்டம், ரங்காபுரம் மற்றும் நெமிலி வட்டம், மகேந்திரவாடி பகுதிகளில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை மிளிரும் பலகைகள் அமைத்து விபத்துகளை தடுப்பது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளரை கேட்டுக்கொண்டார்.வாலாஜா மற்றும் ஆற்காடு நகரங்கள் வழியாக கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் காலை 8மணி முதல் 11மணி வரையும் மற்றும் மாலை 4மணி முதல் 7மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள ராணிப்பேட்டை டி.எஸ்.பி மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர்களுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறுகரும்பூர் சந்திப்பு, பெருகரும்பூர் சந்திப்பு, துரைபெரும்பாக்கம் சந்திப்பு, அத்திப்பட்டு சந்திப்பு, கடப்பேரி சந்திப்பு, சுமைதாங்கி சந்திப்பு, பாகவெளி சந்திப்பு, தனியார் பள்ளி அருகே அவளூர் சந்திப்பு, களத்தூர் சந்திப்பு, பொன்னியம்மன் சந்திப்பு மற்றும் பெரும்புலிபாக்கம் சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல் மற்றும் உயர்அழுத்த மின்விளக்கு, ஒளிரும் விளக்குகள் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அலுவலர் ஆகியோரை கேட்டுக்கொண்டார்.

அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் பேருந்துகளை அதிவேகத்தில் இயக்குவதை தடுத்திட ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி மற்றும் ஆர்.டி.ஓ ஆகியோர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேசிய நெடுஞ்சாலை (எண். 48)-ல் மதுரவாயல் முதல் வாலாஜாப்பேட்டை வரையிலான சாலையில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லைக்குள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள 14 கம்பங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்.

மேற்குறிப்பிட்ட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள ராணிப்பேட்டை எஸ்பி, ஆர்.டி.ஓ, தேசிய நெடுஞ்சாலை துறை செயற் பொறியாளர், ஆகியோரை கேட்டுக் கொண்டார்.இதில், எஸ்பி கிரண்ஸ்ருதி, டி.ஆர்.ஓ சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், நீதியியல் வட்டாட்சியர் ஜெய்குமார் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வாலாஜா பஸ்நிலையம் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பேருந்துகள் நிறுத்த மாற்று இடம் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Walaja Bus Station ,Ranipet ,Walaja ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...