×
Saravana Stores

இனுங்கூரில் 100 ஆண்டு பழமையான கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது

*எம்எல்ஏ மாணிக்கம், அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு

குளித்தலை : இனுங்கூரில் 100 ஆண்டு பழமையான கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது. தகவலறிந்த எம்எல்ஏ மாணிக்கம், அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த இனுங்கூர் ஊராட்சி பகுதியில் உள்ளது மாயனூரில் இருந்து பிரிந்து சித்தலவாய், மகாதானபுரம், வீரவல்லி, வைபுதூர், கருங்காப்பள்ளி கணக்கப்பிள்ளையூர், மேலப்பட்டி, வலையப்பட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, கணேசபுரம், பங்களாபுதூர், இனுங்கூர் வழியாக நச்சலூர் புரசம்பட்டி, நெய்தலூர், சோம்பரசன் பேட்டை வரை செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நெல், வாழை பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட இந்த கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இனுங்கூர் அருகே வாகன போக்குவரத்திற்காக குறுக்கே பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது வலுவிழந்த நிலையில் எந்நேரமும் இடிந்து விழும் சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதனால் விவசாய இடுபொருள்களை கொண்டு செல்ல கனரக வாகனங்கள் தற்காலிகமாக செல்வதில்லை. இதனால் பல மைல் தூரம் சுற்றி வந்து எதிர் கரையில் உள்ள விவசாய நிலத்திற்கு வாகனத்தில் இடுபொருள்களை ஏற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் இனுங்கூர் கிராமத்திலிருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு இந்த கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும் அதனால் தற்பொழுது பாலம் வலுவிழந்த நிலையில் இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலை கருதி மாவட்ட ஆட்சியர் , ஆற்று பாதுகாப்பு பொதுப்பணி நீர்வள துறை அதிகாரிகள் கள ஆய்வு கண்டு உடனடியாக இனுங்கூர் பகுதி வழியாக செல்லும் பழுதடைந்த நிலையில் எந்நேரம் ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ளகட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்த செய்தி தினகரன் நாளிதழில வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென இனுங்கூர் கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் பாதியில் இடிந்து விழுந்து போக்குவரத்துக்கு வழியில்லாமல் இருந்து வந்துள்ளது. கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் திடீரென இடிந்து விழுந்த நிலை குறித்து நேற்று திட்ட பணிகள் தொடங்கி வைக்க இனுங்கூர் ஊராட்சிக்கு வருகை தந்த எம்எல்ஏ மாணிக்கத்திடம் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.நூறாண்டு கால பழமை வாய்ந்த இந்த பாலம் இடிந்து விட்டது. இதனால் எங்களது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை உடனடியாக நேரடி ஆய்வு செய்து மீண்டும் புதிய பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ மாணிக்கம் உடனடியாக பழுதடைந்த கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தை அதிகாரிகளுடன் நேரடி கள ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். அதன் பிறகு பாலத்தின் இரு பகுதிகளிலும் தடுப்பு அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் இருந்தனர்.

The post இனுங்கூரில் 100 ஆண்டு பழமையான கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Command ,Metu ,Inungur ,MLA Manikkam ,metu canal bridge ,MLA Manikam ,Karur district ,Inungur panchayat ,Kulithalai ,
× RELATED போடி மெட்டு அருகே மலைச்சாலையில் மண்...