×

தஞ்சாவூர் சாலியமங்கலம் பகுதியில் வாய்க்கால் தண்ணீரில் வாத்துக்கள் உற்சாகம்

* இயற்கை உரமாகும் எச்சங்கள்

* முட்டை வியாபாரம் அமோகம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் பகுதியில் சம்பா நெல் அறுவடை முடிந்துள்ளது. இந்த வயல்களில் ராமநாதபுரம் மற்றும் வேலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் வாத்துக்களை மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர். காலையிலிருந்து மாலை வரை வயல்களில் மேய்ச்சல் முடித்துவிட்டு அருகில் உள்ள வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உற்சாக குதியாட்டம் போட்டு வருகின்றன வாத்துக்கள்.

வாத்து இறைச்சிக்கு என்று பெரியளவில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் கிராக்கி இல்லை. இதை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் இறைச்சிக்காக விற்பனை செய்வதும் இல்லை. வாத்து முட்டைகள் மட்டும் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. குறிப்பாக கேரளா மற்றும் பிற மாவட்டங்களில் வாத்து முட்டைகளுக்கு சந்தை வாய்ப்பு அதிகளவில் உள்ளது. வாத்துக்களை ஒரே இடத்தில் வைத்து தீவனம் இடுவது என்பது நடக்காத காரியம். ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வொரு வாத்து கூட்டத்திலும் குறைந்தது 500 வாத்துக்களாவது இருக்கும். சற்று பெரிய கூட்டம் என்றால் ஆயிரத்தில் இருக்கும்.

இத்தனை வாத்துக்களுக்கும் தீவனம் அளிக்க முடியாது என்பதால் தஞ்சை மாவட்டத்தில் அறுவடை முடிந்த வயல்களில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகள், புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை வாத்துக்களுக்கு இரையாக்க இவ்வாறு வாத்துக்கிடை போடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. மேலும் உணவு பற்றாக்குறையை போக்க அரிசி வாங்கி இரையாக போடுகின்றனர். இப்படி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அறுவடை முடிந்த வயல்கள் உள்ள பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கள் வாத்துக்களை மேய்த்து வருகின்றனர். தற்போது தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் உட்பட பல பகுதியில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் முடிந்துள்ள வயல்களில் வேலூர் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான வாத்துக்களை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

தற்போது பூச்சிகள், புழுக்கள் அதிகளவில் வயல்களில் கிடைப்பதால் வாத்துக்களுக்கு உணவாகிறது. மேலும் சிறு, சிறு நத்தைகளையும் வாத்துக்கள் உணவாக்கி கொள்கின்றன. இதுகுறித்து வாத்துக்கிடை போட்டுள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், அறுவடை முடிந்துள்ள வயல்களில் நெல் மணிகள் சிதறிக்கிடக்கிறது. இதை வாத்துக்கள் உண்டு வருகின்றன. மேலும் வயல்பகுதியில் கிடைக்கும் பூச்சி, புழுக்கள் போன்றவையும் உணவாகிறது.

மேலும் வாத்துக்களுக்கு அரிசியையும் உணவாக தருகிறோம். குறுவை, ஒரு போக சம்பா, தாளடி போன்ற அறுவடை முடியும் காலங்களில் இங்கு வந்து வாத்துக்களை மேய்ச்சலுக்கு விடுவோம். இங்கேயே கூடாரம் அமைத்து சமைத்து சாப்பிட்டு வாத்து முட்டைகளை சேகரித்து விற்பனை செய்வோம். எங்களை போலவே எங்களது உறவினர்களும் இப்பகுதியில் வாத்துக்களை மேய்ச்சலுக்காக கொண்டு வந்துள்ளனர்.

முட்டை வியாபாரத்துக்காக மட்டும்தான் நாங்க வாத்து வளர்க்கிறோம். ரெண்டரை வயசான பிறகு வாத்துகள் முட்டை விடுவது குறைந்து விடும். அந்த வாத்துகளை மட்டும் கறிக்காக விற்பனை செய்து விடுவோம். வாத்துக்களை ஆயிரக்கணக்குல வளர்த்தாத்தான் முட்டைகள் அதிகம் கிடைக்கும். விவசாயிகளுக்கும் வாத்து எச்சங்கள் இயற்கை உரமாக வயலுக்கு கிடைத்து விடும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post தஞ்சாவூர் சாலியமங்கலம் பகுதியில் வாய்க்கால் தண்ணீரில் வாத்துக்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Chaliyamangalam ,Thanjavur ,Ammappettai, Chaliyamangalam ,Thanjavur district ,Ramanathapuram ,Vellore ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...