×

புதுவையிலிருந்து வாரந்தோறும் மூன்று முறை இயக்கப்படும் காக்கிநாடா, கச்சகுடாவுக்கு ரயில் சேவை

*காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து காக்கிநாடா மற்றும் கச்சகுடாவுக்கான எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக எந்தவிதமான ரயில்களின் நீட்டிப்போ அல்லது புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்போ இல்லாமல் இருந்தது. இதனால் செங்கல்பட்டு – காக்கிநாடா சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலை புதுவை வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் ஏனாம் பிராந்திய மக்கள் பயன்பெறுவார்கள் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கவர்னர் தமிழிசை, ஆட்சியாளர்கள் உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு – காக்கிநாடா சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டு வாரந்தோறும் மூன்று முறை இயக்கப்படும். அதேபோல், செங்கல்பட்டில் இருந்து கச்சகுடா வரை இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலும் புதுவை வரை நீட்டிக்கப்பட்டு வாரந்தோறும் மூன்று முறை இயக்கப்படும். இந்த ரயில்களின் சேவை மார்ச் 13ம் தேதி முதல் துவங்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி, பிரதமரின் `ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரயில் நிலையத்தில் சுடுமண் பொம்மை விற்பனை அரங்கம் திறப்பு மற்றும் காக்கிநாடா எக்ஸ்பிரஸ் மற்றும் கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடி அசைத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் செல்வம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார், செல்வகணபதி எம்பி மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது: ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு என்கிற திட்டத்தின் மூலம் அந்த பகுதியில் கிடைக்கும் முக்கிய பொருட்களை பெறுவதற்கு வழி செய்யப்படுகிறது. வந்தே பாரத் ரயில் வந்ததும் விமானத்தில் பயணித்தவர்களும் ரயிலில் பயணம் செய்கிறார். சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியானது. ஆனால், இன்று ‘சுயசார்பு இந்தியா, ‘உள்ளூருக்கான குரல்’ போன்ற திட்டங்கள் மூலம் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் எல்லா ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுவதுடன் சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

காக்கிநாடா எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை வந்தது. அது புதுச்சேரிக்கும் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இன்று அந்த ரயில் புதுச்சேரி வந்திருப்பதற்கு ரயில்வே அமைச்சருக்கும், பாரத பிரதமருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம். இப்போது புதுவைக்கு பல ரயில்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இங்கே இரட்டை என்ஜின் பூட்டப்பட்ட அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாலே பல்வேறு ரயில் என்ஜின்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பல திட்டங்கள் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு கிடைக்க முடியும் என்பதற்கு புதுச்சேரி ஒரு உதாரணம். புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் 400% சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து மக்களுக்கு சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும் போது அது மக்களை சரியாக சென்றடையும். இவ்வாறு அவர் பேசினார்.

The post புதுவையிலிருந்து வாரந்தோறும் மூன்று முறை இயக்கப்படும் காக்கிநாடா, கச்சகுடாவுக்கு ரயில் சேவை appeared first on Dinakaran.

Tags : Kakinada, Kachaguda ,Puduwai ,Puducherry ,Modi ,Kakinada ,Kachchaguda ,Kakinada, ,Kachaguda ,Dinakaran ,
× RELATED அருணாச்சலில் இருந்து போனா பாஸ்போர்ட்,...