×

அக்னிநட்சத்திரமே ஆரம்பிக்கல… அனல் காத்து அப்படி அடிக்குது… கொளுத்தும் வெயிலுக்கு சூடுபிடிக்கும் தர்பூசணி விற்பனை

* ஆந்திராவில் இருந்து ஆண்டிபட்டிக்கு நேரடி இறக்குமதி

* விற்பனை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் வழக்கத்திற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயற்கை குளிர்பானங்களான தர்பூசணி, பழச்சாறு, இளநீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.ஆண்டிப்பட்டி தேனி சாலையோரங்களில் பல இடங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. தர்பூசணியை பொறுத்த வரையில் கடந்த ஆண்டை விட தற்போது விலை அதிகமாகவே காணப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

வழக்கமாக கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், பாண்டிச்சேரி, மரக்கோணம், வந்தவாசி, மேல்மருவத்தூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து தர்பூசணிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த ஆண்டு புயல் காரணமாக தர்பூசணி விளைச்சல் தாமதமாகி உள்ளது. இதன் காரணமாக தற்போது ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி நகரில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்வு என்றாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுதவிர உடலை குளிர்ச்சியாக்கும் கம்மங்கூழ், மோர், பழச்சாறு விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மேலும் வெயில் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பகல் நேரங்களில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதிக வெப்பநிலையில் மயக்கம் ஏற்பட்டவர்கள் மற்றும் குழப்பமான மனநிலையில் இருப்பவர்களுக்கு உடனடியாக அவர்களது ஆடையின் மீது குளிர்ந்த நீரை ஊற்றலாம். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்லுதல் அவசியம். ஓஆர்எஸ் கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். பருவகால பழங்களான தர்ப்பூசணி, முலாம்பழம், மாம்பழங்கள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் பொறித்த துரித உணவுகள், காரமான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேணடும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பது நல்லது.

மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது. அதேபோல் வெறுங்காலுடன் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வெளியே சென்று விளையாடுவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.

மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் அருந்த வேண்டும்.
பழ ஜூஸ்கள் அதிகளவில் சாப்பிட வேண்டும். நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளான சுரைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். பஜ்ஜி, சூடான மசாலா உணவுகள் தவிர்க்க வேண்டும். தண்ணீரில் சீரகம், வெந்தயம் கலந்து ஊற வைத்து, அந்த தண்ணீரை பருகினால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும்

தமிழகத்தில் கோட காலமான ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை அதிகளவில் வெப்பம் பதிவாகி வருவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரத்தில் பெரும்பாலான சாலைகள் வாகன ஓட்டிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடும் வெயிலின் காரணமாக வேர்க்குரு, சரும பாதிப்புகள், அம்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் நடப்பாண்டு வழக்கத்தை விட கூடுதலாக வெப்பநிலை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எப்போ சாப்பிடலாம்.. எப்படி சாப்பிடலாம்…

சூட்டை தணிக்கும் சக்தி தண்ணீர் சத்து நிறைந்த ஒரு பழம் என்றால் அது தர்பூசணி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணலாம். அதிக அளவு நீர்ச்சத்துடனும், மிகுந்த சுவையுடனும் இருக்கும் தர்பூசணி நம் உடலை போதுமான அளவு நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சியும் அளிப்பதால் எங்கேனும் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்த அளவு தர்ப்பூசணியை சாப்பிடுவது நல்லது.

அதே சமயத்தில் தர்பூசணியை நாம் அளவுக்கதிகமாக சாப்பிடக் கூடாது. தர்பூசணியை காலை உணவின்போது அல்லது காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம். இதைத் தவிர மாலை நேரங்களிலும் தர்பூசணி பழத்தை நாம் சாப்பிடலாம். இரவு நேரங்களில் வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் வயிற்று சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகலாம். இதனை பழமாக உண்பது ஒரு சுவை என்றால் இதையே பழச்சாறாக ஜில்லென்று குடிப்பது ஒரு தனி உணர்வு தான்.

ஜில்லென்ற ஜூசும், கடித்து சாப்பிட சிறு சிறு துண்டுகளாக ஜூஸில் மிதக்கும் பழமும் சாப்பிடும்போது கோடை வெயிலுக்கு குதூகலமாக இருக்கும். தர்பூசணி பழச்சாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். அதேபோல் தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு குடிக்கலாம். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். தர்பூசணி பழச்சாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும். தர்பூசணி பழச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.

The post அக்னிநட்சத்திரமே ஆரம்பிக்கல… அனல் காத்து அப்படி அடிக்குது… கொளுத்தும் வெயிலுக்கு சூடுபிடிக்கும் தர்பூசணி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Andhra ,Theni district ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்