×

பொய்யும், வாட்ஸ் அப் கதைகளும் தான் பாஜகவின் உயிர் மூச்சு: பொள்ளாச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி: பொய்யும், வாட்ஸ் அப் கதைகளும் தான் பாஜகவின் உயிர் மூச்சு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் ரூ.560 கோடி மதிப்பிலான 273 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்; சிறப்பான 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமிதத்துடன் உங்களை சந்திக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெல்வது நிச்சயம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி, காலை உணவு, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், கள ஆய்வில் முதல்வர், இன்னுயிர் காப்போம், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். கோட்டையில் இருந்து திட்டத்தை அறிவிக்கும் முதலமைச்சராக மட்டுமில்லாமல் களத்தில் நேராக சென்று ஆய்வுசெய்கிறேன். மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதில்தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு சிலருக்கு பொறாமை. பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள்.

அவதூறு பரப்புபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய சரியான காலம் வந்துவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலிங்கராயன் வாய்க்கால் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. திருப்பூர் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு, 800 கி.மீ. சாலைகள், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வனவிலங்கு தாக்கி உயிரிழப்போருக்கு இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என கூறினார்

தொடர்ந்து பேசிய அவர்; கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது; தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உள்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும்.

ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி. பூங்கா தரம் உயர்த்தப்படும் ஈரோடு மாவட்டத்தில் 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள், மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு வீ கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் ரூ.75 கோடியில் கட்டப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; அதிமுக, பா.ஜ.க. மக்களை ஏமாற்ற பிரிந்ததுபோல் நடிக்கிறார்கள். அதிமுக, பா.ஜ.க. கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம்.. பக்கமாக விளம்பரம் செய்கிறார். வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா? அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன? மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக, மக்களுக்கு என்ன செய்தது?

பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்கமுடியுமா கஞ்சா, குட்கா, மாமுல் பட்டியலில் அமைச்சரும் டிஜிபியும் இருந்தது யார் ஆட்சியில்? தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரங்கள். குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுத்தவர்கள் தான் இன்று உத்தமர் வேடம் போடுகின்றனர்.

மாமூல் வாங்கியவர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயரும், போலீஸ் டி.ஜி.பி. பெயரும் இருந்தது அதிமுக ஆட்சி. அந்த வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் தடுப்பவர்கள்தான் இன்றைக்கு உத்தமர்கள் போல பேசுகின்றனர். தமிழ்நாட்டிற்கு செய்துள்ள சிறப்புத் திட்டங்களை பிரதமர் பட்டியலிட தயாரா? நாட்டு மக்களுக்கு எதையும் செய்திடாத பிரதமர் – பக்கம் பக்கமாக வாக்குறுதி அளிக்கிறார். ஒன்றிய அரசு திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் பொய் உரைக்கிறார். பொய்யும், வாட்ஸ் அப் கதைகளும் தான் பாஜகவின் உயிர் மூச்சு இவ்வாறு கூறினார்.

 

The post பொய்யும், வாட்ஸ் அப் கதைகளும் தான் பாஜகவின் உயிர் மூச்சு: பொள்ளாச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Bajaga ,Pollachi ,lady ,K. Stalin ,Chief Minister ,MLA ,Goa ,Mu K. Stalin ,
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...