×

மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியை ஊக்கப்படுத்த ₹2.12 கோடி மதிப்பில் மெருகூட்டும் இயந்திரங்கள்

*விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி : தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி, தர்மபுரி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியை ஊக்கப்படுத்தும் விதமாக மஞ்சள் வேகவைக்கும் இயந்திரங்கள் மற்றும் மெருகூட்டும் இயந்திரங்களை வழங்க உள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு 10 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டது.

நடப்பாண்டு இதுவரை 4 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு பயிரிட்ட மஞ்சள் அறுவடை முடிந்த இடங்களில், தற்போது மஞ்சள் சாகுபடியும் ஒருபக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் மஞ்சள் சாகுபடி செய்கின்றனர். நடப்பு ஆண்டுக்கான மஞ்சள் அறுவடை பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.

தற்போது மஞ்சள் அறுவடை தீவிரமடைந்துள்ளது. அதே வேளையில், மஞ்சள் அறுவடை மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு போதிய வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறை சூழலும் ஏற்பட்டுள்ளது. சந்தையில் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கடந்த ஒருமாத காலமாக நல்ல தரத்திலான மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும் விலை கிடைத்து வந்தது. தற்போது, மேலும் விலை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ரூ.13 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தர்மபுரி, அரூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், மஞ்சள் ஏலம் விடப்படுகிறது. இதனால், ஈரோட்டிற்கு செல்லும் நேரம்-செலவு மிச்சமாகிறது. தர்மபுரி மாவட்டத்திலேயே மஞ்சள் ஏலம் விடப்படுவதால், மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த வாரம் தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி ரகம் குவிண்டால் ரூ.14,579க்கும், உருண்டை ரகம் ரூ.13,549க்கும் விற்பனையானது.

மஞ்சள் விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு 2 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்கள், 2 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களை வழங்க உள்ளது. விவசாய பட்ஜெட்டில் ஈரோடு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும், 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது:

வைகாசி மாத தொடக்கத்தில் முன்பட்டமாக மஞ்சள் நடவு செய்த விவசாயிகள், ஓரிரு மாதம் முன்பே அறுவடை செய்துள்ளனர். வேகவைத்து, உலர்த்தி, பாலிஷ் செய்து மண்டிகளில் விற்பனை செய்து விட்டனர். கடந்தாண்டில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் கூடுதல் விலை கிடைத்தது. நடப்பாண்டில் முன்பட்டமாக நடவு செய்து அறுவடை செய்த சொற்ப விவசாயிகளுக்கும் இந்த விலை கிடைத்தது.

ஆனால், அறுவடை பணி வேகமெடுத்து மண்டிகளுக்கு மஞ்சள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதுமட்டுமன்றி, ஊரக வேலை உறுதித்திட்டம் போன்ற காரணங்களால், வேளாண் பணிகளுக்கு ஏற்கெனவே போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. நடவு முதல் அறுவடை வரை கடினமான உழைப்பை கொடுத்தே ஒவ்வொரு விவசாயியும் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற உழைப்புக்கு பலனளிக்கும் வகையில் ஓரளவு நிறைவான விலை கிடைத்தால் தான், மன திருப்பதி அளிக்கும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி ஊக்கப்படுத்த தமிழக அரசு 2 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்கள், 2 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களை வழங்க உள்ளது வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

The post மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியை ஊக்கப்படுத்த ₹2.12 கோடி மதிப்பில் மெருகூட்டும் இயந்திரங்கள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Nadu Agricultural Budget ,Dharmapuri district ,
× RELATED கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்