×

ஊட்டி பண்பாட்டு மைய வளாகத்தில் அரசின் சாதனை, நலத்திட்டங்கள் குறித்து சிறப்பு புகைப்பட கண்காட்சி

*சுற்றுலா துறை அமைச்சர் திறந்து வைத்தார்

ஊட்டி : ஊட்டியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து சிறப்பு புகைப்பட கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட தொழில் மையம், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தலைமையில் தமிழ்நாடு அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மகளிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதேபோல், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று, மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உயர் சிகிச்சை வழங்கும் வகையில் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. உதகை தலைமை மருத்துவமனையை கூடலூர் வட்டத்திற்கு மாற்றப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குன்னூர் மற்றும் கோத்தகிரி அரசு மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடைகள் மூலம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறையின் சார்பில், இன்னுயிர் காப்போம், நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கிய பல்வேறு நபர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே அரசு அலுவலர்கள் தங்கி, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண வேண்டும் என உருவாக்கப்பட்ட உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தேர்ந்தெடுத்து, அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நமது மாவட்டத்தில், பல்வேறு அரசு பேருந்துகள் சீரமைக்கப்பட்டு, நல்ல நிலையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடியல் திட்டத்தின்கீழ், 118 பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமான மகளிர் பயன்பெற்று வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் 1.12 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். நமது மாவட்டத்தில் 2500 முதல் 3000 நபர்கள் வரை வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது. மேலும், நமது மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் அளிக்கும் சிகிச்சை, மக்களை தேடி மருத்துவம், உங்களை தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குதல், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, ஊட்டச்சத்து உறுதிசெய், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும் முன்காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் இன்று முதல் தொடர்ந்து 7 நாட்கள் இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் பார்வையிட்டு, அரசின் நலத்திட்ட உதவிகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக, அமைச்சர் ராமச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் விளக்கும் வகையில் திரையிடப்பட்ட குறும்படத்தை பார்வையிட்டார். கலை பண்பாட்டு துறையின் சார்பில், ஜவஹர் சிறுவர் மன்ற குழந்தைகளின் வரவேற்பு நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார். இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் மகளிர் திட்டம், சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காசிநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலார் சண்முக சிவா, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஷ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தேவகுமாரி, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் (எ) மாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சரண், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) ஷோபனா, ஊட்டி தாசில்தார் சரவணகுமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி பண்பாட்டு மைய வளாகத்தில் அரசின் சாதனை, நலத்திட்டங்கள் குறித்து சிறப்பு புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Ooty Cultural Center ,Tourism Minister ,Ooty ,Ramachandran ,Tamil Nadu government ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...