×

கருணைக்குத் துணை நின்றவன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உலக நன்மைக்காகப் பல அவதாரங்கள் எடுத்தவர், திருமால். “எங்கு அதர்மம் தலைதூக்குகின்றதோ, அங்கே நான் வருவேன்’’ என்று பகவத் கீதையில் கூறினார். ராமாவதாரத்தில், ராவணனை வதம் செய்வதற்காகவே வைகுண்டத்தில் இருந்து பூவுலகில் அவதரித்தார். அவரின் அவதாரத்தின் பெருமையைப் பார்க்கத் தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும் காத்துக் கொண்டிருந்தனர். இந்த அற்புதமான அவதாரம் எடுத்ததும், தசரதன் மகனாக வளர்ந்து, பட்டாபிஷேகம் என்ற நாள் குறித்ததும், தேவர்கள் கதி கலங்கிவிட்டனர். காரணம், ராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்து அயோத்திலேயே தங்கிவிட்டால்! அவருடைய அவதரித்த பணியானது தடைப்படுமே.. ராவண வதம் நடைபெறாதே! என்று குழம்பி தவித்தனர்.

அக்கணம், பிரம்மாவும் சிவபெருமானும், தேவர்கள் சூழ ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது; பிரம்மன், சரஸ்வதியை நோக்கி, `நீ பூவுலகில் சென்று, பட்டாபிஷேகத்தை தடுத்து நிறுத்தவேண்டும். என்று கூறினார். அதைக் கேட்டதும் சரஸ்வதி தேவி, “எப்படி
என்னால் இயலும்? என்றார்.

“பூவுலகில் கூனி என்ற மந்தாரை, கைகேயி-யின் மனதைக் கலைத்து, அவள் உள்ளத்தை மாற்றி, தசரதனிடம் முன்பு பெற்ற மூன்று வரங்களைக் கேட்டு, பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று வழிமுறையை சரஸ்வதியிடம் கூறி அனுப்பிவைத்தனர். அவ்வாறே, சரஸ்வதி துணையால் கூனி மனதில் புகுந்து அவள் உருவில் சென்று பட்டாபிஷேகத்தை நிறுத்தி, கானகத்திற்கு (வனவாசம்) அனுப்பி வைத்தாள் என்று துளசிதாசரின் ராமாயணம் கூறுகிறது. கம்பருடைய ராமாயணத்தில், கைகேயியானவள் மனதை மாற்றியவள், அவளின் வளர்ப்பு பணிப் பெண்ணான கூனியே.. அவளால் கானகத்தில் நடந்து வந்த பொழுது சூர்ப்பனகையின் சூழ்ச்சியினால், ராவணன் சீதாதேவியை சிறைப் பிடித்தான். அவளும் துன்புற்றாள். கருணைக் கடலான ராமபிரானுக்கு உறுதுணையாக நின்றது, வீடணன். வீடணன், அசுரனாக ஒரு பாதியும், அந்தணனாக மீதி பாதியுமாக, கலந்துச் செய்த ஒரு பிறவியாவான்.

கருணைக்கடல் என்று போற்றக் கூடிய ராமனுக்கு, போர்க்களத்தில் நுணுக்கமான ரகசியங்களைக் கூறியவன். தன்னுடைய அண்ணன் ராவணனுக்கு, ராமனின் பெருமைகளை விளக்கிக் கூறி, அறத்தினை பாவம் ஒருநாளும் வெல்லாது என்றுகூறி ராமன் பக்கம் சேருகின்றான். லட்சுமணனுக்கும், இந்திரஜித்துக்கும் போர் நடைபெறுகின்றது. அதில் இந்திரஜித், லட்சுமணன் முதல் கொண்டு அனைவரையும் மடக்கி நாகக்கணையினால் கட்டி, மெய் மறக்கச் செய்தான்.

இந்த அவலநிலையை கண்ட ராமன், மற்றுமுள்ளவர் யாவரும் அல்லலுற்று அழுதனர். என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்ற பொழுது, வீடணன், “ராகவனே! நீ கலங்காதே. இங்கு இந்திரஜித் தன் திறமையால் நாகபாசக்கணையினால் கட்டி வைத்திருக்கிறான். கருடன் வந்து நாகக்கட்டை விடுவித்தால், இலக்குவன் எழுந்துவிடுவான் என்ற செய்தியை ராமபிரானுக்கு கூறினான். கருணைக்கடலாக இருந்த ராமபிரானுக்கு, பக்க துணையாக இருந்து, லட்சுமணன் நாக மாயக் கட்டில் இருந்து உயிர்த்து எழுவதற்கானக் காரணத்தை சொல்லுகின்றான்.

அந்த நேரத்தில், கருடன் வந்து காற்று வீசி நாகபாஷனை நீக்கியதும், துயில் எழுந்தது போல விழித்து எழுந்தான் இலக்குவன். இந்திரஜித், “தன் தந்தையான ராவணனுக்கு தொல்லை கொடுத்த லட்சுமணனை மாய்த்துவிட்டேன். அவனை நாகக்கனையினால், பிணைத்துவிட்டேன்’’ என்றுகூறி சந்தோஷத்தில் திளைத்திருந்தான். அக்கணத்தில், “லட்சுமணன் பிழைத்துவிட்டான்’’ என்ற செய்தியைக் காவலாளி வந்து கூறுகின்றான்.

அதைக் கேட்ட இந்திரஜித், உடனே அவனை எவ்வாறேனும் தாக்கி வெற்றி பெற வேண்டும் என்று ஆவேசத்துடன் மொழிகின்றான். அடுத்த நாள் போரினிலே, இந்திரஜித்தின் திறமையை ராம – லட்சுமணர் அறிந்தனர். போர்க்களத்தில், தயாராக வந்திருந்த ராம – லட்சுமணனை பார்த்த இந்திரஜித், நான்தான் வெற்றிப் பெறப் போகிறேன் என்கின்ற மமதையுடன் புன்னகைக்கின்றான். “இருவருமாக சேர்ந்து நின்று என்னுடன் போர் புரிய வந்தீரோ? அல்லது உங்களில் இணையான ஒருவர் மட்டும் வந்து உயிரைப் போக்கு வீரோ? அப்படியும் இல்லை எனில் இருவரும் உம் படையோடுச் சேர்ந்து அழிந்துப் போவீறோ? ஏது செய்யப் போகிறீர்கள்? கூறுங்கள்..’’ எனக் கொக்கரித்தான். அதற்கு லட்சுமணன் ஆத்திரம் கொண்டு, வில், மல் மற்றும் ஆண்மையை விளைவித்த படைப் போர்களிலும் உன்னோடு எதிர்த்து உன் உயிரை வாங்குவதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன் என்று சூளுரைக்கின்றான்.

சூளுரைக் கேட்ட இந்திரஜித், கொதித்து எழுந்தான். லட்சுமணன், அவனைப் பார்த்து “நான், ராமனின் தம்பி. ராவணனுடைய மகன் அட்சயகுமாரன், அதிகாயன், அரக்கராக பிறந்த அத்தனை பேரையும் அழிக்க வந்திருக்கிறேன். அவர்களுக்கு ஈமக்கடன் செய்ய வேண்டும் என்பதற்காகவே உன் சிறிய தந்தை வீடணன் இங்கு எங்களுடன் சேர்ந்து இருக்கின்றான். நீயும் மறைந்துவிடுவாய், ஆதலால் உன்னுடைய தந்தைக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கடன்களை எல்லாம் இன்றே மனமிரங்கி செய்துவிடுவாயாக’’ என்றுகூறி போரிலே இறங்குவதற்குள், இந்திரஜித், தனது பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு வீழ்த்துகின்றான். இந்த காட்சியைக் கண்ட ராமபிரான் துடிக்கின்றார்.

“எந்த இடம்தான் என்று இருந்தேன்
உலகெல்லாம்
தந்தனன் என்றும் கொள்கை தவிர்த்தேன் தமியல்லேன்,
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உறை காணேன்
வந்தனென் ஐயா, வந்தனென் ஐயா இனி வாழேன்’’.

தந்தை இறந்தார் என்ற அறிந்த பொழுது, உயிர் வாழ்ந்தேன். “அண்ணா இந்த உலகத்தை எல்லாம் நானே உனக்குத் தருவேன்” என்றுகூறி எனக்காக அனைவரையும் எதிர்த்தும் என்னைக் காப்பாற்றினாய், ஆனால் நான் உன்னை காப்பாற்றாமல் அல்லவா விட்டுவிட்டேன். நீ ஒருவன் என் உடன் உயிர் வாழ்கிறாய் என்று நான் உயிர் தாங்கி வாழ்ந்தேன். இனி உன் துணை இல்லை என்ற சொல்லுக்கு இனி வாழவழியில்லை. தம்பி, உன்னோடு நான் வந்துவிடுகின்றேன்….

தம்பி நான் உன்னோடு வந்துவிடுகின்றேன்…’’ என்று தம்பியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று அரற்றுகின்றான் ராமபிரான். அச்சமயத்தில், வீடணன் கலங்கிய ராமனுக்கு ஆறுதல் அளித்து, சஞ்சீவி மலை என்றோரு மலையில் இருக்கிறது. அங்கிருந்து மூலிகையினை எடுத்து லட்சுமணனுக்கு கொடுத்தால் மீண்டும் உயிர்பித்துவிடுவான் என்று விடணன்கூற, அவ்வாறே அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்து வைத்ததும், அந்தக் காற்று பட்ட உடனே, அனைவரும் துயில் நீங்கி எழுந்தது போல எழுந்தனர். இந்த காட்சியைக் கண்டு அனைவரும் வியக்கின்ற பொழுது, தன்னால் போரில் வெல்ல இயலுமா? என்று நினைத்து கலங்கிய இந்திரஜித் நிகும்பல யாகம் செய்ய கிளம்பினான். அப்பொழுது வீடணன், வண்டு உருவம் எடுத்துச் சென்று, யாகத்தை கவிழ்த்துவிடுகின்றான்.

இந்திரஜித், தன் தவவலிமையால் ஓர் வரம் பெற்று இருந்தான். தன்னை அழிக்க கூடியவன் 14 ஆண்டுகள் யார் தூங்காமல் விழித்திருக்கிறார்களோ, அவரால்தான் நான் இறக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்று இருந்தான். அத்தகையவன் லட்சுமணன் என்பதை அறிந்துக் கொண்டான். போரில், லட்சுமணனால் இந்திரஜித் மாண்டான். பின்பு, ராவணவதம் எளிதாக நடை பெற்று, வெற்றியும் பெற்றனர். வீடணனின் அறிய செயல்கள் பற்றி ராமபிரான் கூறுகின்றார்.

‘ஆடவர் திலக! நின்னால் அன்று; இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று;
வீடணன் தந்த வென்றி, ஈது’ என விளம்பி மெய்ம்மை,
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின், இப்பால்’.

“தம்பி லட்சுமணா, நாம் பெற்ற இந்த வெற்றி, ஆடவர் திலகமாக போற்றும் நின்னால் அல்ல, சொல்லின் செல்வனான அனுமான் என்னும் பெரியோனாலும் அன்று, வேறு தெய்வத்தினுடைய மகிமையாலும் இந்த போரில் நாம் வெற்றி பெறவில்லை. இந்த வெற்றியை நமக்கு கொடுத்தது வீடணன். இவன் துணையால் பெற்ற வெற்றியே ஆகும் என்ற உண்மையை மகிழ்ந்து உரைத்தான் ராமபிரான். வீடணனை, “விபீஷண ஆழ்வார்’’ என்றும் போற்றி அழைக்கப்படுகின்றது.

தொகுப்பு: பொன்முகரியன்

The post கருணைக்குத் துணை நின்றவன் appeared first on Dinakaran.

Tags : Thirumal ,Ramavatara ,Vaikunda ,earth ,Ravana ,
× RELATED ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?