×

விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் வேளாண் ஆராய்ச்சிகளை மாற்ற வேண்டும்

*கலெக்டர் அறிவுறுத்தல்

காரைக்கால் : வேளாண் ஆராய்ச்சிகளை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் மாற்ற வேண்டும் என்று கலெக்டர் மணிகண்டன் அறிவுறுத்தி உள்ளார்.காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடத்தப்படும் புதுவை,தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் சிறுதானிய உற்பத்தி நுகர்வு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக கருத்து பட்டறை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் கலந்து துவக்கி வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் முதல்வர் வெங்கடேச பழனிச்சாமி, கர்நாடகா கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் லலித் அச்சுத், புதுவை பல்கலைக்கழக பொருளாதாரத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் மணிகண்டன் பேசியதாவது:

இயற்கை சார்ந்த வேளாண்மை அபிவிருத்திக்கு ஐசிஏஆர் பல்வேறு நிதிகளை வழங்கிறது. விவசாயிகள் திட்டங்கள் செயல்பாடுகள் அறிந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். காரைக்கால் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு எதிராக போராடவில்லை. அவர்களின் உரிமைக்காகவும், துறைகளில் நடைபெறும் தவறுகளை வெளிப்படுத்தவே போராடுகின்றனர். ஆனால் விவசாயிகள் ஐசிஎஸ்ஆர் நடத்துகின்ற கருத்து பட்டறையில் கலந்து கொண்டு அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.விவசாயிகள் இந்த செயல் வரவேற்கதக்கது. அரசுடன் இணைந்து விவசாயிகள் பயணிக்கின்றனர். நம் நாட்டில் ஆராய்ச்சிக்கு பஞ்சமில்லை.

ஆனால் ஆராய்ச்சிகளை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் மாற்ற வேண்டும். சிறந்த ஆராய்ச்சிகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். தற்போது கல்லூரி நிர்வாகத்தின் முயற்சியால் பல்வேறு புதிய கல்விகள் மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பஜன்கோ கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்படும். தென்னிந்திய அளவில் ஒரு ஐஏஆர் இன்ஸ்டியூட் அளவுக்கு வளர பேராசிரியர்கள் மாணவர்கள் உழைக்க வேண்டும். ஆதிகாலத்திலேயே சிறுதானிய உணவுகளை உட்கொண்டு தான் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். காலப்போக்கில் மறைந்ததின் விளைவாக துரித உணவுகள் ஆக்கிரமித்து உடலுக்கு நீங்கி செய்கின்றனர்.

எனவே அனைவரும் சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும். சிறுதானிய நுகர்வு பழக்கத்தினைபொதுமக்களை சென்றடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் சிறுதானிய உற்பத்தி பற்றிய இணைய வழி படிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் வேளாண் ஆராய்ச்சிகளை மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Manikandan ,Pandit Jawaharlal Nehru Agricultural College and Research Institute ,Serumavilanga ,Tirunallaru ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...