×

தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி திகினாரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாக்கையா (64). இவரது விவசாய தோட்டம் அப்பகுதியில் உள்ள ஜோரைக்காடு வனப்பகுதியை ஒட்டி கடுக்காய் மரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தினமும் இரவில் இப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. எனவே தனது தோட்ட பயிருக்கு மாக்கையா காவல் இருந்தார்.

நேற்று அதிகாலை மாக்கையா தனது தோட்டத்து வீட்டில் இருந்தபோது நாய் சத்தமிட்டுள்ளது. வெளியே வந்த மாக்கையா விவசாய தோட்டத்திற்குள் காட்டு யானை நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையை விரட்ட முயற்சித்தார். அப்போது காட்டு யானை மாக்கையாவை துரத்தி தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசி கீழே போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மாக்கையா உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இது குறித்து உடனடியாக தாளவாடி போலீசாருக்கும், ஜீரகள்ளி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட முயன்றனர்.
அப்போது தாளவாடி மலை கிராமங்கள் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுக்க விடாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசாரும், வனத்துறையினரும் யானை தாக்கி இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப இயலாமல் நின்றனர். அவர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன், ஆசனூர் மாவட்ட வன அலுவலர் சுதாகர், தாளவாடி தாசில்தார் சுப்ரமணியம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம், யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை வனத்துறையினர் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள யானை வெளியேறும் இடங்களில் ரயில் தண்டவாளத்திற்கு பயன்படுத்தப்படும் இரும்பு பார்களை பயன்படுத்தி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். யானை தாக்கி பலியான மாக்கையாவின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய விவசாயிகள் போராட்டம் மாலை 3 மணி வரை நீடித்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் யானை தாக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தமிழக அரசின் வனத்துறை மூலம் வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதற்கட்டமாக இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த உடன் நிவாரணத் தொகையில் பாதி தொகையான ரூ.5 லட்சத்திற்கான காசாலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போலீசார் மாக்கையா உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Talavadi hills ,Sathyamangalam ,Makhaiya ,Thiginarai ,Erode district ,Mustard Tree Division ,Joraikadu forest ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...