×

வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

 

ஈரோடு, மார்ச் 13: ஈரோடு, வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஈரோடு மாநகராட்சி, 60வது வார்டுக்கு உள்பட்ட வெண்டிப்பாளையம் குப்பைக்கிடங்கில், நேற்று முன்தினம் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த பயங்கர தீயால் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவிலான கரும்புகை வெளியேறியது.

இதன் காரணமாக, வெண்டிபாளையம், மரப்பாலம், இந்திராநகர், கருங்கல்பாளையம் பகுதிவாழ் மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்பட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. தீ குறித்த தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2வது நாளாக அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன், 3 சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில், 80க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாநகர நல அலுவலர் டாக்டர் பிரகாஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார், பொறியாளர்கள், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், வெண்டிப்பாளையம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார் கூறுகையில், ‘‘வெயிலின் தாக்கம் காரணமாகவே குப்பைகளில் தீ பற்றியது. மேலும், எதிர் வரும் கோடைக்காலத்தில் இதுபோல, வெயிலின் தாக்கத்தால் தீ விபத்து ஏற்படாதவாறு தவிர்ப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

The post வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vendipalayam ,dump ,Erode ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை