×

அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

 

ஈரோடு, மார்ச் 13: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி வலியுறுத்தி உள்ளது. ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) மாநில செயலாளர் சின்னசாமி தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணி, பாதுகாவல் உள்ளிட்ட பணிகளில் சுமார் 30 ஆயிரம் பேர் ஒப்பந்த பணியாளர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு, ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சட்ட பூர்வமான நலன்களை ஒப்பந்த நிறுவனங்கள் வழங்குவதில்லை. மிகக்குறைந்த ஊதியத்தை மட்டுமே வழங்கி வருகின்றனர். அதேபோல் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டபடி 100 சதவீத பணியாளர்களை பணியமர்த்துவதில்லை. இதனால் தொழிலாளர்கள் மீது கடுமையான அளவுக்கு வேலைப்பளு சுமத்தப்படுகிறது. எனவே, அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் நேரடிப் பணியாளர்களாக்கி 480 நாட்கள் பணியாற்றிய அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த உத்தரவிடவேண்டும்.

அதேபோல, கலெக்டர் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ.26 ஆயிரத்திற்கு குறையாமல் உயர்த்தி, திருத்தியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Erode ,AITUC ,Erode District Medical Staff Union ,State Secretary ,Chinnaswamy ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...