×

கொடைக்கானலில் யானை-மனித மோதல்களை தவிர்க்க வனத்துறையினருக்கு பயிற்சி

கொடைக்கானல், மார்ச் 13: கொடைக்கானல் மலைப்பகுதியில் யானை மனித மோதல்கள் மற்றும் வன விலங்குகள் மனித மோதல்களை தவிர்ப்பதற்காக அந்தப் பகுதிகளில் பணியாற்றும் வன பணியாளர்கள் மற்றும் வனத்துறையினருக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. கொடைக்கானல் வனத்துறை, காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கொடைக்கானல் வனக்கோட்டத்தைச் சேர்ந்த அனைத்து வனசரகங்களில் இருந்தும் வனத்துறையினர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். ஓசை அமைப்பைச் சேர்ந்த ஓசை காளிதாஸ், கால்நடைத்துறை டாக்டர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பக பயாலஜிஸ்ட் பீட்டர் உள்பட பலர் வனத்துறையினருக்கு யானை மனித மோதல்களை தவிர்த்து வனத்துறையினரை பாதுகாப்பது எப்படி, மக்களை காப்பது எப்படி, யானை உள்ளிட்ட வன உயிரினங்களை காப்பது எப்படி என்பது பற்றிய பயிற்சிகளை வழங்கினர்.

இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, கொடைக்கானல் ரேஞ்சர் சிவக்குமார், பேரிஜம் ரேஞ்சர் சுரேஷ்குமார், ஆகியோர் செய்திருந்தனர். ரேஞ்சர்கள் செந்தில்குமார், குமரேசன், வனவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் இந்த முகாமில் பங்கேற்றனர். இதில் காணொளி வாயிலாகவும், கலந்துரையாடல்கள் வாயிலாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

The post கொடைக்கானலில் யானை-மனித மோதல்களை தவிர்க்க வனத்துறையினருக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,GODAIKANAL FOREST DEPARTMENT ,TAMIL NADU ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்