×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பணியாளர்கள் குடியிருப்பினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2021 -22ம் நிதியாண்டிற்கான அறநிலையத்துறை சட்டமன்ற மானிய கோரிக்கை அறிவிப்பில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூ.2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும், என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுர அடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இப்புதிய குடியிருப்பினை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* ரூ.10 கோடியில் விளையாட்டு மைதானம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்காவில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக மேம்படுத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ேநற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த விளையாட்டு மைதானத்தில் 2 பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், நடைபயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வாகன நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக இது அமையவுள்ளது. நிகழ்ச்சியில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி நிலை குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டல குழு தலைவர்கள் எஸ்.மதன்மோகன், ராமலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni Parthasarathi Temple ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Parthasarathy Temple ,Tiruvallikeni ,Hindu Religious Endowment Department ,Tamil Nadu ,Tiruvallikeni Parthasarathy Temple ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...