×
Saravana Stores

புது வீட்டில் பால் காய்ச்சியபோது தகராறு திருமணமான 4 மாதத்தில் மனைவி அடித்து கொலை: கணவன் கைது

பெரம்பூர்: அயனாவரம் வசந்தா கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா (36). இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (எ) உமர் (38) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும், கீழ்கட்டளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கு, பிரியாணி கடையில் உமர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், உமருக்கு சரியான வேலை இல்லாத காரணத்தினால், வீட்டு வாடகை கொடுப்பது மற்றும் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல், கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கீழ்கட்டளை பகுதியில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு, இருவரும் அயனாவரம் பகுதியில் உள்ள சையத் அலி பாத்திமாவின் அம்மா பல்கீஸ் என்பவரது வீட்டில் வந்து தங்கி உள்ளனர்.

அதன்பிறகு கடந்த 9ம் தேதி, சையது அலி பாத்திமா தனது தாயாரின் வீட்டு அருகே உள்ள வசந்த கார்டன் மெயின் தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து, பால் காய்ச்சி உள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுக்கு சையத் அலி பாத்திமா, பர்தா போடாமல் பால் கொடுக்க சென்றுள்ளார். இதனால் உமர் ஆத்திரமடைந்து ஏன் பர்தா போடாமல் அக்கம் பக்கத்து வீட்டிற்கு செல்கிறாய் என கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பல்கீஸ் சம்பவ இடத்திற்கு வந்து மருமகன் மற்றும் மகளை சமாதானப்படுத்தி விட்டு, வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார். பின்னர், இரவு 11 மணி அளவில் கணவன் – மனைவி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த உமர், வீட்டில் இருந்த பிரியாணி கரண்டியை எடுத்து, மனைவி சையத் அலி பாத்திமா தலையில் பலமாக இருமுறை அடித்துள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, இரவு 12 மணி அளவில் உமர் தனது மைத்துனர் பீர் முகமது என்பவரை செல்போனில் தொடர்புகொண்டு, நடந்ததை கூறிவிட்டு, மனைவியின் பர்சில் இருந்த ரூ.2500 பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சையத் அலி பாத்திமாவின் தம்பி பீர்முகமது மற்றும் தாயார் பல்கீஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சையத் அலி பாத்திமாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சையத் அலி பாத்திமா சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, கோயம்பேடு பகுதியில் சுற்றித்திரிந்த உமரை, அயனாவரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக சுயநினைவு இன்றி சிகிச்சை பெற்று வந்த சையத் அலி பாத்திமா நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அயனாவரம் போலீசார் சிறையில் உள்ள உமர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணத்தில் ஆர்வம் இல்லாத சையத் அலி பாத்திமா, 36 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு திருமணம் செய்ய சம்மதித்து, இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ரவிக்குமார் (எ) உமரை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

The post புது வீட்டில் பால் காய்ச்சியபோது தகராறு திருமணமான 4 மாதத்தில் மனைவி அடித்து கொலை: கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Syed Ali Fatima ,Ayanavaram Vasantha Garden Main Street ,Ravikumar (A) Umar ,Kilikatala ,Kielkatale ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய...