சென்னை: மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள 11 மதிப்பீடு மற்றும் ஆய்வு அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அதன்மூலம் பயன் அடைந்தவர்கள் என்ன சொல்கிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஆய்வு செய்தோம்.
இரண்டாவதாக மக்களை தேடி மருத்துவம், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பது உள்ளிட்ட 11 திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. போக்குவரத்தால் ஏற்படும் மாசு பாதிப்பை குறைப்பது, காடுகள் பாலைவனங்களாக மாறுவதை தடுப்பது, தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களின் மேலாண்மை என 11 அறிக்கைகளை அரசிடம் அளித்திருக்கிறோம்.
காலை உணவு திட்டத்தால் குழந்தைகள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. பள்ளிக்கு செல்ல மறுக்கும் நிலை தற்போது மாறியுள்ளது. அவர்கள் 9 மணிக்கு பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றால், தற்போது 7.30 மணிக்கே மிகவும் ஆர்வமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் தினசரி வருகை 60 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குழந்தைகள் காலை உணவை மிகவும் விரும்பி சாப்பிடுவதாக அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூறி உள்ளனர். குழந்தைகள் தற்போது வீட்டுக்கு சென்று, பள்ளியில் கொடுப்பது போன்று சாப்பாடு எங்களுக்கு வீட்டிலும் கொடுங்கள் என்று கேட்கும் நிலை உள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
வெளியில் வேலைக்கு செல்லும் தாய்மார்கள், பிள்ளைகள் சாப்பிட்டதா, இல்லையா என்ற கவலை தற்போது தங்களுக்கு இல்லை என்கிறார்கள். காலை உணவு திட்டத்தில் இட்லி, தோசை போன்ற உணவை மாணவர்கள் விரும்பி கேட்கிறார்கள். இது கிராமப்புறங்களில் சாத்தியம் என்றாலும், நகர்ப்புறங்களில் சில நடைமுறை சிக்கல் உள்ளது. இதுகுறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்று மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது 50 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அரசு வழங்கும் காலை உணவு திட்டத்தால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் ஆர்வம் அதிகரிப்பு: முதல்வரிடம் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் அறிக்கை appeared first on Dinakaran.