×

சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே கூடுதலாக வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

* டெல்லியிலிருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

* சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணையமைச்சர் முருகன் பங்கேற்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையை சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ரயில்வே வாரியம் அதற்கு ஒப்புதல் அளித்தது.

அந்தவகையில் சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே கூடுதல் ரயில் உட்பட 10 வந்தே பாரத் ரயில் சேவை இயக்கத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். சென்னை – மைசூரு இடையேயான 2வது வந்தே பாரத் ரயில் தொடக்க விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ரயில் வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து தினமும் காலை 6 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 12.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். அதேபோல், மீண்டும் மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், மாண்டியா வழியாக இரவு 11.20க்கு மைசூரு சென்றடையும்.
இந்த வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை – பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்பட்டு, மறுநாள் 5-ம் தேதியில் இருந்து மைசூரு வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை – மைசூரு இடையே கூடுதலாக ஒரு புதிய வந்தே பாரத் ரயில், லக்னோ – டேராடூன், கலபுர்கி – பெங்களுரு, ராஞ்சி – வாரணாசி, டெல்லி( நிஜாமுதீன்) – கஜுரஹோ, செகந்திராபாத் – விசாகப்பட்டினம், நியூ ஜல்பைகுரி – பாட்னா, லக்னோ – பாட்னா, அகமதாபாத் – மும்பை, புரி – விசாகப்பட்டினம் என மொத்தம் 10 வழித்தடங்களில் புதிய வந்தேபாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதுதவிர, சிங்கபெருமாள் கோயில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வள்ளியூர் ஆகிய 6 ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையத்தையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதேபோல், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மலிவு விலை மருந்தகங்களையும் 168 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ அரங்குகளையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி:

விரைவில் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 6000 கோடி வரை ரயில்வேயில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை உள்நாட்டிலேயே அதுவும் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-பில் தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் எளிதில் பயணிக்க இன்னும் பல வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே துறை தரப்பில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. குடியுரிமை சட்டத்தை பற்றி அனைவரும் முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே கூடுதலாக வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Chennai Central ,Mysore ,Modi ,Delhi ,Governor RN Ravi ,Union Minister of State ,Murugan ,Chennai Chennai ,Chennai Central - ,PM Modi ,Dinakaran ,
× RELATED வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி