×
Saravana Stores

இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது

சென்னை: இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுக்கும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி-எப்14 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் இருந்து கடந்த பிப்.17ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. காலநிலை மாற்றம் ஏற்படும் நிலையில், வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதி பங்களிப்பின் கீழ் வானிலை ஆய்வுக்காக இன்சாட்-3டிஎஸ் எனப்படும் அதிநவீன செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் விண்கலம் செலுத்தப்பட்ட போது 3, 4 நாட்கள் புவி வட்டபாதையில் பயணித்து பின் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது அதன் படி கடந்த பிப்.28ம் தேதி அதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தை சென்றடைந்தது. இந்நிலையில் செயற்கைகோள் இன்சாட்-3டி.எஸ். வானிலை செயற்கைக்கோள் பூமியை புகைப்படம் எடுக்கும் செயல்பாடுகளைத் தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு:

இன்சாட் விண்கலத்தில் உள்ள கருவிகளின் (6-சேனல் இமேஜர் மற்றும் 19-சேனல் சவுண்டர்) முதல் தொகுப்பு படங்களை கடந்த 7ம் தேதி எடுத்து அனுப்பியது. இந்த செயற்கைகோளில் உள்ள அனைத்து கருவிகளும் செயல்பட தொடங்கி உள்ளது. குறிப்பாக இதில் உள்ள 6-சேனல் இமேஜர் கருவி பல நிறமாலை சேனல்கள் அல்லது அலைநீளங்களில் பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் படங்களைப் எடுத்து அனுப்பி உள்ளது. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை கண்காணிப்பு மற்றும் வளிமண்டல செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

The post இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது appeared first on Dinakaran.

Tags : ISRO ,Earth ,CHENNAI ,Satish Dhawan Space ,Center ,Sriharikota, Andhra Pradesh ,
× RELATED அலர்ஜியை அறிவோம்..! டீடெய்ல் ரிப்போர்ட்!