×

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றத்தால் அரசுப்பள்ளிகளில் 1 லட்சம் மாணவர் சேர்க்கை: 5 லட்சம் குழந்தைகளை சேர்க்கவும் இலக்கு

சென்னை: தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் இதுவரை 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் அடுத்த 2024-25ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி உள்ளது. கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து, மும்முரமாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளுடன் அரசு பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறையும் பல்வேறு திட்டங்கள், வசதிகளை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் ‘’ஸ்மார்ட் கிளாஸ் ரூம்’’ கொண்டுவரப்பட இருக்கிறது. இதுதவிர 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற வசதிகள், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கக் கூடிய நலத்திட்டங்கள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.

இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.கடந்த 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மட்டும் 1,01,443 மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக தொடக்கக்கல்வித் துறை தெரிவித்து இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவும், 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.மாணவர் சேர்க்கை தொடங்கிய 11 நாட்களில் 1 லட்சம் பேர் சேர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், இது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம், தமிழ்நாட்டின் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பில் ஏற்பட்டுவரும் மிகப்பெரும் மாற்றம் தான் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியை தொடங்கும்போது, அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மேலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

நடுத்தர மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசுப்பள்ளி மாணவர்களை மட்டும் அல்லாமல், அவர்களின் பெற்றோர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் என அனைவரையும் தமிழ்நாடு அரசு கொண்டாடுகிறது. இதன் காரணமாகத்தான் தற்போது அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

* அனைத்து தொடக்கப்பள்ளிகளும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் கொண்ட பள்ளிகளாக மாற்றம்.

* அனைத்து நடுநிலைப்பள்ளிகளும் உயர்நுட்ப ஆய்வகம் (HiTech Lab) கொண்ட பள்ளிகளாக மாற்றம்.

* நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி வழிகாட்டல்.

* புதுமைப்பெண் திட்டம் மூலம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல்.

* தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம், இனி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை.

* காலை நேரச் சிற்றுண்டி மூலம், கிராமப்புறங்களில் பட்டினியில்லாமல் குழந்தைகள் கல்வி பயிலும் சூழல்.

* கலைத் திருவிழாக்கள் மூலம் மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் மேடை.

* சிறப்பாக செயல்படும் தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுபெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்குத் தலா ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படுகிறது.

* கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி உள்ளிட்ட பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்திய சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது.

* நடப்பாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த வேண்டும் என உத்தரவிட்டு, ரூ.16 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றத்தால் அரசுப்பள்ளிகளில் 1 லட்சம் மாணவர் சேர்க்கை: 5 லட்சம் குழந்தைகளை சேர்க்கவும் இலக்கு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,India ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...