×

பழநியில் ஜூன் அல்லது ஜூலையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: பழனியில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் நடைபெறும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 45,477 கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் முதற்கட்டமாக சென்னையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

கடந்த ஆட்சியில் அமைக்கப்படாமல் இருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவினை அமைத்து, அதன் உறுப்பினர்களாக ஆதீன பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியமினம் செய்யப்பட்டனர். 2022 ஜனவரி மாதம் இக்குழுவின் முதல் கூட்டமும், அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இரண்டாவது கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய 500 தற்காலிக பணியாளர்களை பணி வரன்முறை செய்யப்படும்,

கிராமப்புற கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ.2 லட்சத்தை ரூ.2.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும், சட்டப்பிரிவு 49(i) ன் கீழ் வருகின்ற நிதிவசதியில்லாத கோயில்களில் திருப்பணி செய்திடும் வகையில் முதற்கட்டமாக 500 கோயில்களில் அரசு நிதி மற்றும் துறை நிதியின் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள 14 சமண கோயில்களை புனரமைக்க எந்த ஆட்சியிலும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் தற்போது ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்,

பதிப்பகப் பிரிவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 216 அரிய பக்தி நூல்களை உலகெங்கிலுமுள்ள ஆன்மிக அன்பர்கள் படித்து பயன்பெறும் வகையில் மின் நூல்களாக (E-Book) வெளியிப்படும், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருகர் பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழநியில் ஜூன் அல்லது ஜூலை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் நடத்தப்படும், 45,477 கோயில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பழநியில் ஜூன் அல்லது ஜூலையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : International Muthamil Murugan Conference in Palani ,Minister ,Shekharbabu ,Chennai ,PK Shekharbabu ,International Muthamil Murugan Conference ,Palani ,Chennai Hindu Religious Endowments Commissioner ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...