×

மாணவனை தாக்கி கைவிலங்கு பூட்டிய தலைமை காவலர் சஸ்பெண்ட்: துணை கமிஷனர் அதிரடி

பெரம்பூர்: கல்லூரி மாணவனை தாக்கி, கை விலங்கு பூட்டி அழைத்துச் சென்ற தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் அதே பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்துக் கொண்டு, பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கிளை செயலாளராக உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, அருண்குமார் சென்னை கடற்கரை நிறுத்தத்தில் இருந்து பெரம்பூர் அகரம் செல்வதற்காக சவாரி ஏற்றிக்கொண்டு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு ஆட்டோ திடீரென பிரேக் பிடித்ததால், அருண்குமார் தனது ஆட்டோவை நிறுத்த முயற்சி செய்தபோது ஆட்டோவில் இடதுபுறம் லைட் கண்ணாடி உடைந்துள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தகராறு ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக சாதாரண உடையில் வந்த செம்பியம் தலைமை காவலர் அண்ணாமலை, அருண்குமாரின் வாகனத்தை எடுக்கும்படி சத்தம் போட்டுள்ளார். எதற்காக இப்படி பேசுகிறீர்கள், என அருண்குமார் கேட்டதால், ஆத்திரமடைந்த தலைமை காவலர், அருண்குமாரை கன்னத்தில் அறைந்து, கை விலங்கு பூட்டியுள்ளார். அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற உதவி ஆணையர், போலீசாரின் வாகனத்தை வரவழைத்து அங்கிருந்து ஆட்டோவை அப்புறப்படுத்த உத்தரவிட்டதுடன், அருண்குமாரை காவல் நிலையம் அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு சென்றார்.

பின்னர் ரோந்து போலீசார் அருண்குமாரை கைவிலங்குடன், செம்பியம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். உடனே தகவலறிந்து அருண்குமாரின் நண்பர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருண்குமார் தன்னை தாக்கி கைவிலங்கு பூட்டி அழைத்துச் சென்ற தலைமை காவலர் அண்ணாமலை மீது செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு, இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் தலைமை காவலர் அண்ணாமலை அடித்ததில் அருண்குமாருக்கு காது பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே அருண்குமாரை அடித்த தலைமை காவலர் அண்ணாமலையை பணி நீக்கம் செய்ய வேண்டும், இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அகில இந்திய மாணவர் பெருமன்றத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், மாணவனை பொது இடத்தில் அடித்து, கைவிலங்கிட்டு அழைத்து வந்த தலைமை காவலர் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post மாணவனை தாக்கி கைவிலங்கு பூட்டிய தலைமை காவலர் சஸ்பெண்ட்: துணை கமிஷனர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Arun Kumar ,Vyasarpadi ,BBA ,Dr. Ambedkar College ,Dinakaran ,
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...