×

இ-சேவை மையங்கள் மூலம் எல்எல்ஆர் பெற விண்ணப்பம்: இன்று முதல் அமல்

சென்னை: வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெறுவதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (எல்எல்ஆர்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இ-சென்டர்களையும் பொதுமக்கள் அணுகவேண்டிய நிலை உள்ளது.

எனவே, இதனை தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இந்த முறையை மேம்படுத்துவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே இதுபோன்ற சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், அரசு முடிவு செய்து உள்ளது. அதனடிப்படையில் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000-க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்எல்ஆர் (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும், இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெறுவதற்கு பொதுமக்கள் சேவை கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எலஎல்ஆர் -ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (ஓட்டுநர் உரிமம், பர்மிட், உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post இ-சேவை மையங்கள் மூலம் எல்எல்ஆர் பெற விண்ணப்பம்: இன்று முதல் அமல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Shanmukha Sundaram ,Amal ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...