×

ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீட்டின் உரிமையாளருக்கு நெஞ்சுவலி: திரும்பி சென்ற அதிகாரிகள்; திருப்போரூர் அருகே பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தபோது, உரிமையாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அதிகாரிகள் வீட்டினை இடிக்காமல் திரும்பி சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருப்போரூரை அடுத்துள்ள காலவாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்றனர்.

அப்போது, வீடுகளின் உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாற்று இடத்தில் இடம் வழங்கினால் மட்டுமே வீடுகளை காலி செய்வோம் என்று வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். உரிய மனு அளித்தால் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வோம் என்று அதிகாரிகள் பதிலளித்தனர். இதனிடையே வீட்டை இடித்து தள்ள அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சென்றபோது, வீட்டின் உரிமையாளர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்காமல் திரும்பிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீட்டின் உரிமையாளருக்கு நெஞ்சுவலி: திரும்பி சென்ற அதிகாரிகள்; திருப்போரூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Kalavakkam ,Tirupporur ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ