×

ஏமாற்றுவதில் இது புது விதம்டா சாமி… இரட்டை குழந்தை என பிரதமரிடமே பொய் சொன்ன பாஜ நிர்வாகி: மோடியின் வாழ்த்து டிவிட்டரால் சிக்கிக்கொண்டார்

சென்னை: இரட்டை குழந்தை பிறந்ததாக பொய் சொல்லி பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற பாஜ நிர்வாகி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது ஒரு முறை கூட அவர் வரவில்லை. தோல்வி பயத்தின் காரணமாக தான் பிரதமர் மோடி அடிக்கடி வருவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அப்படி தமிழகத்திற்கு கடந்த 4ம் தேதி பிரதமர் மோடி வந்தார்.

அன்றைய தினம் அவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் பாஜவினர் வரவேற்றனர். அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜ நிர்வாகி வரவேற்பு தெரிவித்தார். இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டார் அதில், சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வந்த் பிஜய் என்னை வரவேற்க காத்திருந்தார்.

சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளை தெரிவித்தேன். நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை அடுத்து யார் இந்த அஸ்வந்த் பிஜய் என பாஜவினர் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அஸ்வந்த் பிஜய், தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருவதும், சென்னை வேளச்சேரியில் வசிப்பதும் தெரியவந்தது. பிரதமர் மோடியிடம் கூறியது போல் அஸ்வந்த் பிஜய்க்கு குழந்தை பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக அவரிடம் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அஸ்வந்த் பிஜய் பொய் சொல்லியதும் அம்பலமாகியுள்ளது. பிரதமரிடம் சொன்ன தகவல் யாருக்கும் தெரியாதுன்னு அவர் நினைத்து இருந்தார். ஆனால் பிரதமர் மோடியே இந்த நிகழ்வை தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் வெளியிட்டதால் அஸ்வந்த் பிஜய் சிக்கினார்.

இதையடுத்து அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவானார். இதை கேள்விப்பட்டு நெட்டிசன்கள் பாஜவினர் பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை ஏமாற்றியது போய், பிரதமரையே ஒருவர் ஏமாற்றி விட்டாரே என்று வறுத்து எடுத்து வருகின்றனர். இதனால் பிரதமரை ஏமாற்றியவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

* நெட்டிசன்கள் பாஜவினர் பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை ஏமாற்றியது போய், பிரதமரையே ஒருவர் ஏமாற்றி விட்டாரே என்று வறுத்து எடுத்து வருகின்றனர்.

The post ஏமாற்றுவதில் இது புது விதம்டா சாமி… இரட்டை குழந்தை என பிரதமரிடமே பொய் சொன்ன பாஜ நிர்வாகி: மோடியின் வாழ்த்து டிவிட்டரால் சிக்கிக்கொண்டார் appeared first on Dinakaran.

Tags : Sami ,Baj ,PM ,Modi ,twitter ,CHENNAI ,BJP ,PM Modi ,Tamil Nadu ,
× RELATED பச்சையம்மன் சமேத மன்னார் சாமி கோயில்...