×

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது தமிழ்நாட்டில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; நாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.

அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானது. இதன் காரணமாகத்தான், இச்சட்டத்திற்கு எதிராக, பேரவையில் அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

The post இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது தமிழ்நாட்டில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,Chennai ,M. K. Stalin ,Union Government ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்