×

குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும்: தலைவர்கள் கண்டனம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும். இது உணர்வுகளை தூண்டி ஆதாயம் தேடும் முயற்சி என அரசியல் கட்சியினர் கண்டனர் தெரிவித்துள்ளனர்.

* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மோடி தலைமையில் பா.ஜ தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும், காஷ்மீர் சிறப்பு உரிமைப் பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ,நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலும் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிற்போக்கு இந்துத்துவ பாசிச பாஜ அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றே ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமை.

* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்களே இருக்கிற நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமலுக்கு கொண்டு வந்தே தீருவேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிவந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன்மூலம் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

வருகிற மக்களவை தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திக்கிற அரசியல் சூழல் ஏற்பட்டதில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள இறுதியாக குடியுரிமை திருத்த சட்ட அஸ்திரத்தை பயன்படுத்த பாஜ முயற்சிக்கிறது. இது நிச்சயம் வெற்றி பெறாது. பாஜவின் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவையும், பாமகவையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வருகிற மக்களவை தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

* இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: இந்தச் சட்டத் திருத்தம் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபில் நின்று, வழிவழியாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மக்களை பிளவுபடுத்தும். வாழ்வாதார பிரச்னைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி, மத உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும்.

* விசிக தலைவர் திருமாவளவன்: தேர்தல் பத்திரங்களின் மூலம் பெற்ற நன்கொடைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜவுக்கு எதிராகவுள்ள நிலையில், அதனைத் திசை திருப்பும் தீங்கான சதிமுயற்சி.

* தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: உலகிலயே கலாச்சாரம் நிறைந்த நாடாக மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும், நமது இந்திய நாட்டின் குடியுரிமை சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றைக்கும் ஏற்காது.

* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: இந்த சட்டம் மூலம் பொதுமக்களைப் பிளவுபடுத்தி, இறையாண்மையைச் சிதைக்கத் துடிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவசரம் அவசரமாக தாக்கல் செய்துவிட்டு, 4 ஆண்டுகள் காலம் கடத்தி, தேர்தல் தேதி அறிவிக்க உள்ள சில நாட்களுக்கு முன் அமல்படுத்துவது, பாஜவின் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. தொடர் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கண்டுகொள்ளாமல், இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் நோன்பு தொடங்கியிருக்கும் முதல் நாளில், இந்த அவலத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

* தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார்:முழுக்க முழுக்க மத அடிப்படையில் மக்களை பிளந்து ஒரு சார்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிட வேண்டும் என்கிற அரசியல் நோக்கோடு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை தற்போது மோடி அரசு நடைமுறைக்கு உத்தரவிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும்: தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madhyamik General Secretary ,Vaiko ,Modi ,BJP ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்