×

காஞ்சி மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் ஆணையரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 21 தீர்மானங்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் ஆணையரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 21 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை கொண்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி மேயராக திமுகவை சார்ந்த, மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவ்வப்பொழுது ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர் செயல்பாட்டிற்கு எதிராக போர் கொடி தூக்குவது, அதேபோன்று எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில்முருகன் நியமிக்கப்பட்டார். செந்தில்முருகன் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என எதிர்கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று, திமுக கவுன்சிலர்களையும் அவர் மதிப்பதில்லை என நேற்று நடந்த மாதாந்திர கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், நிறைவேற்றப்பட இருந்த 21 தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்யப்படுவதாக மேயர் மகாலட்சுமி அறிவித்து கூட்டத்தை பாதியிலேயே முடித்தார்.

கூட்டம் முடிந்த பிறகும் திமுக கவுன்சிலர்கள் வெளியேறாமல் இருக்கையில் அமர்ந்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், வார்டுகளுக்கு மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இதுபோன்று வீடு கட்ட அனுமதி தருதல், புதிய வீட்டுமனைகள் உருவாக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மட்டும் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். புதிதாக ரூ.250 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் அவசர அவசரமாக நேற்று முன்தினம் பூமிபூஜை செய்யப்பட்டதாகவும், இவற்றுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித தகவலும் தரப்படவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் 3 மண்டல தலைவர்களும், அவர்களுடன் 23 திமுக கவுன்சிலர்களும் கலந்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு ஆதரவாக அதிமுக, பாமக மற்றும் பாஜவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதில், அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சியில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க விசாரணை அமைக்க வேண்டும் என பதாகை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனிடையே கவுன்சிலர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி நடைபெறும் பிரச்னைகளை பற்றி தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

* இன்று கூட்டம்
பல்வேறு பிரச்னை காரணமாக நேற்று கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனிடையே, பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், சாதரண கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சி மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் ஆணையரை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 21 தீர்மானங்கள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchi Municipal Corporation ,Kanchipuram ,DMK ,Kanchipuram Municipal Corporation ,Kanchipuram Corporation ,Mahalakshmi Yuvraj ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...