×

போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

காஞ்சிபுரம்: தமிழகத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரம், வாலாஜாபாத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் இளைய சமுதாயத்தினரை பாதிக்க கூடிய வகையில் போதைப்பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க தவறிய அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையம் காமராஜர் சாலையில், மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் மற்றும் திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு மனித சங்கிலியாக கைகோர்த்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், வாலாஜாபாத்தில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன், பேரூராட்சி செயலாளர் ஹரிகுமார் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு போதைப் பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருப்போரூர்: போதைப்பொருட்கள் விற்பனையை தடைச்செய்யக்கோரி அதிமுகவினர் திருப்போரூரில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கக்கோரி அதிமுக சார்பில், தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில், திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து இள்ளலூர் சந்திப்பு வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் தையூர் குமரவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், நகர செயலாளர் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதிமுகவினரின் இந்த போராட்டத்தால் ஓஎம்ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மாமல்லபுரம் மற்றும் சென்னை நோக்கி சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அப்பகுதிக்கு வந்து கனரக வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்து நெரிசல் ஓரளவு கட்டுக்குள் வந்தது.

The post போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kanchipuram ,Walajabad ,Tamil Nadu ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...