×

திருப்போரூரில் விவசாய நிலங்களில் கழிவுகள் அகற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்போரூர்: தினகரன் செய்தி எதிரொலியால், திருப்போரூர் விவசாய நிலங்களில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்போரூர், தண்டலம், காலவாக்கம், கண்ணகப்பட்டு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. திருப்போரூர் நகரப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை 5 கிமீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை தற்போது கனரக வாகனங்களும், சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கு நேரடியாக செல்லும் வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றன.

இந்த பகுதியினை ஒட்டி நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல் கழிவுகள், பேப்பர் அட்டைகள், மக்காத கழிவுகளை இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து, இந்த புறவழிச்சாலையில் உள்ள விவசாய நிலங்களின் ஓரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகளால், சாலையோரம் உள்ள வாய்க்காலில் தண்ணீர் செல்வது தடுக்கப்படுவதாகவும், நீர் மாசடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து செய்தி தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், துப்புரவு கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் விவசாய நிலங்களின் முன்பு கொட்டப்பட்டிருந்த தெர்மாகோல் கழிவுகளையும், பிளாஸ்டிக் மற்றும் மரக்கழிவுகளையும் அகற்றினர். பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

The post திருப்போரூரில் விவசாய நிலங்களில் கழிவுகள் அகற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Tiruporur ,Dhinakaran ,Thandalam ,Kalavakkam ,Kannagapattu ,Dinakaran ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...