×

தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் இஸ்லாமியர் ரமலான் நோன்பை தொடங்கினர்: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் இஸ்லாமியர் ரமலான் நோன்பை தொடங்கினர். பள்ளிவாசல்களில் இரவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சியை அனைத்து சமுதாய மக்களும் வாங்கி சென்றனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு. ரமலான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம்.

ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரமலான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள். இந்நிலையில், ரமலான் நோன்பு தொடங்குவதற்கான பிறை நேற்று முன்தினம் பல இடங்களில் தென்பட்டது. எனவே மார்ச் 12ம் தேதி (நேற்று) முதல் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்தார். அதன்படி இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.

சென்னை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் நேற்று முதல் நோன்பு வைக்க தொடங்கினர். அதிகாலை முதல் மாலை 6.30 மணி வரை உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர். பின்பு மாலையில் பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி உட்கொண்டு நோன்பை முடித்துக் கொண்டனர். இதே போல் தொடர்ந்து 30 நாட்கள் நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க உள்ளனர். நோன்பு திறப்பதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம்.

இதனை அனைத்து சமுதாய மக்களும் வாங்கி சென்றனர். இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கர் நேற்று அளித்த பேட்டி: இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ரமலான் நோன்பு. இந்த மாதம் முழுவதும் பசித்திருந்து, தனித்திருந்து விழித்திருந்து இறைவனை துதிப்போம். பசி என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்த மாதத்தில் பசியின் மகத்துவத்தை நாம் அறிந்து மற்றவரின் பசிப்பிணி போக்கும் மாமனிதர்களாக மாறுவோம்.

அன்பை, சமாதானத்தை,சகோதரத்துவத்தை அனைவருக்கும் கொண்டு செல்வோம். சாதி, மதம், இனம்,மொழி வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் இந்த உணர்வை மனதில் நிறுத்துவோம். இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க 7040 டன் பச்சரிசியை தாயுள்ளத்தோடு தாராளமாக கொடுத்துள்ளார்.

அவருக்கு மனம் நிறைந்த நன்றி. இந்த மாதத்தில் நோன்பு இருந்து உடல் முழுக்க பசியோடு இருக்கிறபோது உடலில் பெரும் மாற்றம் நிகழும். அந்த மாற்றம் மாபெரும் சக்தியாய் மாறி மனித குலத்திற்கு பயனுள்ளதாய் அமைய இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் இஸ்லாமியர் ரமலான் நோன்பை தொடங்கினர்: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Muslims ,Tamil Nadu ,Ramadan ,CHENNAI ,
× RELATED கோபியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை