×

பொன்முடிக்கு பதவி விரைவில் அறிவிப்பு: சபாநாயகர் பேட்டி

நெல்லை: நெல்லை சந்திப்பு, பெரியார் பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள் விற்பனை கண்காட்சி ஆகியவற்றை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் கலாசாரத்தை அழித்தது, கால்டுவெல் என கவர்னர் மீண்டும் பேசியுள்ளார். இது அவர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், இந்திய கலாச்சாரத்தை அழித்தது பிரிட்டிஷார் என்று கூறினார். பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு இந்தியாவில் உயர் சாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். 1795 வரை இந்த நிலை தான் இருந்தது. இதை மாற்றியது பிரிட்டிஷார்.

தென்னிந்திய திருச்சபையினர், கத்தோலிக்க திருச்சபையினர், அருட்தந்தையர், அருட் சகோதரிகள், இந்தியாவில் மத போதனைக்காக வந்தாலும், அதையும் தாண்டி கல்வி நிறுவனங்களை நிறுவி கல்வி கற்றுக் கொடுத்தனர். பொன்முடி முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். ஒரு வழக்கில் சென்னை ஐகோர்ட் அவருக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.

மீண்டும் அவருக்கு பதவியை வழங்குவது தொடர்பாக வயநாடு எம்.பி., ராகுல் காந்தி, லட்சத்தீவு எம்பி முகமது பைசல், உத்தரபிரதேச மாநிலம், காசிப்பூர் தொகுதி எம்.பி., அன்சாரி ஆகியோரது வழக்கில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதன் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடி வழக்கிலும் சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இது தொடர்பாக சட்டப்பேரவை முதன்மை செயலாளருடன் பேசியுள்ளேன். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

The post பொன்முடிக்கு பதவி விரைவில் அறிவிப்பு: சபாநாயகர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Nellai ,Appa ,Tamil Nadu government ,Periyar ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...