×

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இனி தேர்தல் நடக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு

யவத்மால்: மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: மக்கள் தாங்கள் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்தை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் 400 இடங்களை கைப்பற்ற விரும்பவில்லை. அரசியலமைப்பை மாற்றுவதற்காக நாட்டை கைப்பற்ற விரும்புகிறார்கள். முன்பு நான் முதலமைச்சராகவும், மோடி பிரதமராகவும் உறுதி மொழி ஏற்ற பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறார்கள். 400 இடங்களில் வெற்றி பெற்றால் அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான திட்டம் குறித்து பாஜ தலைவரான அனந்த் குமார் கூட பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் நாட்டில் இனி எந்த தேர்தலும் நடக்காத வகையில் அரசியலமைப்பை மாற்றி அனைத்து அதிகாரங்களையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள். யவத்மால் மாவட்டத்தில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அதையெல்லாம் ஒன்றிய பாஜ அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், யவத்மால் பகுதி தனக்கு அதிர்ஷ்டமானது என்று கருதும் மோடி ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் இங்கு வருவார். மோடியின் தலைவிதி தான் உங்கள் கைகளில் உள்ளது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். இந்த முறை பாஜ 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜவினர் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜ இந்த முறை தூக்கி எறியப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இனி தேர்தல் நடக்காது: உத்தவ் தாக்கரே பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Uddhav Thackeray ,Yavatmal ,Ralegaon ,Yavatmal district ,Maharashtra ,Lok Sabha ,
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!