×

போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

பூந்தமல்லி: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் வளசரவாக்கத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள், பகுதிச் செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுகவினர் சாலையின் இரு புறங்களிலும் மனித சங்கிலி போல் அணிவகுத்து நின்றனர்.

திருவேற்காட்டில் நகரச் செயலாளர் வேலப்பன்சாவடி எஸ்.எஸ்.எஸ்.குமார் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம், அமைப்பு செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முடிவில் திருமலைராஜா, டி.டி.மாரியப்பன் ஆகியோர் நன்றி கூறினர். திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், நகரச் செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி எஸ்.மாதவன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ராஜி, வினோத்குமார் ஜெயின், எழிலரசன், நேசன், ஜோதி, பாலாஜி, ஞானகுமார், சிற்றம் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருமழிசையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு பேரூர் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். பேரூர் நிர்வாகிகள் பிரகாஷ், நாகராஜ், பாண்டியன், அன்வர் பாஷா, சங்கர், வினோத் குமார் வேணுகோபால், வேலு, பிரியா சுரேஷ், பிரதீப், நாகார்ஜுன், மணி, தீபக், ஜெகதீஷ் ஆகியோர் வகித்தனர். இதனை பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார். இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், திருநாவுக்கரசு, ஜனார்த்தனன், ஜாவித் அகமத், பொதுக்குழு உறுப்பினர் காட்டுப்பாக்கம் ராஜகோபால், ஜெகநாதன், ஒன்றிய செயலாளர்கள் புட்லூர் சந்திரசேகர், கவுதமன், மகேந்திரன், பெருமாள்பட்டு ஊராட்சி தலைவர் சீனிவாசன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் சல்மான் ஜாவித், வைத்தியநாதன், சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சார்பில், நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த, மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டார். இந்நிலையில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கையில் குட்கா பாக்கெட்டுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது நகராட்சி பொறியாளர் காரில் அலுவலகத்திகுள் செல்ல முயன்றார். ஆனால் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அவரின் காரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அந்த காரை தட்டி சத்தமிட்டு முழக்கமிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே நகராட்சி அலுவலகம் முன்பு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக ஊர்ந்து சென்றது. மேலும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் அதிமுகவின் இந்த ஆர்ப்பாட்டத்தால் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு குட்கா பாக்கெட்டுகள் எப்படி கிடைத்தது, அதனை எங்கு வாங்கினார்கள் என்பது குறித்தும், நகராட்சி அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை வளசரவாக்கம் மண்டல அலுவலகம் அருகே அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால், ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம், பூண்டி ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூர் அதிமுக சார்பில் ஊத்துக்கோட்டை எம்ஜிஆர் சிலை அருகில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. இதில் எல்லாபுரம் ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமார் தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றியச் செயலாளர் பிரசாத், ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் ஷேக்தாவுத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து அண்ணாசிலை வரை அதிமுகவினர் கைகோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அருணாசலம், சுப்பிரமணி, பிரஸ்மணி, முகம்மது சித்திக், வேதகிரி, கோதண்டன், கன்னிகைகுமார், வக்கீல்கள் வேல்முருகன், மதன், சீனிவாசன், ஆதி, மோகன், உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்: திருவள்ளூர் வடக்கு மாவட்டம் ஆரணி பேரூர் அதிமுக சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. இதில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். அப்போது போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மாநில எம்ஜிஆர் பேரவை இணை செயலாளர் பஞ்செட்டி நடராஜன், ஆரணி நகர செயலாளர் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Human Chain ,Poonthamalli ,Tamil Nadu ,Adimuga ,minister ,district secretary ,Valasaravakam ,Madurawal Assembly Constituency Adimuga ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது