×

விதர்பாக்கு 538 ரன் இலக்கு

மும்பை: மும்பை அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், விதர்பா அணிக்கு 538 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாங்கடே மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச… மும்பை அணி முதல் இன்னிங்சில் 224 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (45.3 ஓவர்). இதைத் தொடர்ந்து, 119 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி, 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்திருந்தது (50 ஓவர்).

முஷீர் கான் 51 ரன், கேப்டன் அஜிங்க்யா ரகானே 58 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தனர். ரகானே 73 ரன் (143 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து 4வது விக்கெட்டுக்கு முஷீர் கான் – ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து விதர்பா பந்துவீச்சை பதம் பார்த்தனர்.

முஷீர் சதம் விளாசி அசத்த, ஷ்ரேயாஸ் அரை சதம் அடித்தார். இவர்களைப் பிரிக்க முடியாமல் விதர்பா பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் 168 ரன் சேர்த்து அசத்தினர். ஷ்ரேயாஸ் 95 ரன் (111 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் தமோர் 5, முஷீர் கான் 136 ரன் (326 பந்து, 10 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்ப, ஷர்துல் தாகூர் கோல்டன் டக் அவுட் ஆனார். ஒரு முனையில் ஷாம்ஸ் முலானி நங்கூரம் பாய்ச்சி நிற்க, பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன் குவித்து ஆல் அவுட்டானது (130.2 ஓவர்).

முலானி 50 ரன்னுடன் (85 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். விதர்பா பந்துவீச்சில் ஹர்ஷ் துபே 48 ஓவரில் 4 மெய்டன் உள்பட 144 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். யாஷ் தாகூர் 3, ஆதித்யா தாக்கரே, அமன் மொகடே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 538 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்துள்ளது. அதர்வா டெய்டே 3, துருவ் ஷோரி 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post விதர்பாக்கு 538 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Vidarbha ,Mumbai ,Ranji Trophy ,Whangade Stadium ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!