×

10 நிமிட காட்சிகளை பார்க்க அனுமதி மறுப்பு தியேட்டர் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 5 பேர் கடந்த வருடம் ஏப்ரல் 30ம் தேதி அங்குள்ள ஒரு தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்ப்பதற்காக சென்றனர். இரவு 7 மணி காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த இவர்கள் 15 நிமிடங்கள் முன்னதாகவே தியேட்டருக்கு சென்று விட்டனர். ஆனால் 7 மணி ஆன பிறகும் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக கூறி இவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை. 10 நிமிடங்கள் கழித்தே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் உள்ளே சென்ற பின்னர் தான் 7 மணிக்கே படம் தொடங்கியது தெரியவந்தது. இதனால் முதல் 10 நிமிட காட்சிகளை இவர்களால் பார்க்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து சரத் உள்பட 5 பேரும் மலப்புரம் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தியேட்டர் உரிமையாளரின் அலட்சியத்தால் தங்களால் சினிமாவின் முதல் 10 நிமிட காட்சிகளை பார்க்க முடியாமல் போனது என்றும், எனவே தியேட்டர் உரிமையாளர் அதற்கான நஷ்ட ஈட்டை தங்களுக்குத் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதை விசாரித்த நுகர்வோர் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருந்தது: பொன்னியின் செல்வன் 2 படத்தின் நேரம் 2 மணி 55 நிமிடங்கள் ஆகும். அதிக நேரம் என்பதால் அடுத்த காட்சி தொடங்குவதற்குள் தியேட்டரை சுத்தப்படுத்த போதிய நேரம் கிடைக்காது. அன்று மழை பெய்ததால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் தாமதமாகத் தான் தியேட்டருக்கு வந்தனர். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த நுகர்வோர் ஆணையம், படத்தின் நேரம் அதிகமாக உள்ளது என்று கூறி ரசிகர்களுக்கு படத்தை முழுமையாக பார்ப்பதற்கு அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதால் 5 பேருக்குமாக ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

The post 10 நிமிட காட்சிகளை பார்க்க அனுமதி மறுப்பு தியேட்டர் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Consumer Commission ,Thiruvananthapuram ,Perinthalmanna ,Malappuram ,Kerala ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!