×

கமல்நாத் மகனுக்கு சிந்த்வாராவில் சீட் காங். 2வது பட்டியலில் 43 வேட்பாளர்கள்: உபி தொகுதிகள் இடம் பெறவில்லை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், மூத்த தலைவர் கமல்நாத் மகனுக்கு சிந்த்வாரா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த 8ம் தேதி 39 தொகுதிகளைக் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் தொடர்பாக கட்சியின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 43 வேட்பாளர்களைக் கொண்ட 2வது பட்டியலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதில், அசாம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் டாமன் டையு ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநில பட்டியல் வெளியாகவில்லை. 2ம் கட்ட பட்டியலில் 43 வேட்பாளர்களில் 13 பேர் ஓபிசி, 10 பேர் எஸ்சி, 9 பேர் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் முஸ்லிம் வேட்பாளர் ஆவார். இதில், மபியில் சிந்த்வாரா வேட்பாளராக மூத்த தலைவர் கமல்நாத் மகன் நகுல் நாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019 தேர்தலில் மபியில் உள்ள 29 தொகுதிகளில் சிந்த்வாராவில் போட்டியிட்ட நகுல் நாத் மட்டுமே காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர் ஆவார்.

இத்தொகுதியில் கமல்நாத், அவரது மனைவி அல்காநாத், மகன் நகுல்நாத் ஆகியோர் இதுவரை 11 முறை வெற்றி பெற்றுள்ளனர். இதே போல, ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட்டுக்கு ஜலோர் தொகுதியும், அசாமில் முன்னாள் முதல்வர் தருண் கோகாயின் மகன் கவுரவ் கோகாய்க்கு ஜோர்கட் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்பி ராகுல் கஸ்வானுக்கு ராஜஸ்தானின் சுரு தொகுதியில் சீட் தரப்பட்டுள்ளது.

 

The post கமல்நாத் மகனுக்கு சிந்த்வாராவில் சீட் காங். 2வது பட்டியலில் 43 வேட்பாளர்கள்: உபி தொகுதிகள் இடம் பெறவில்லை appeared first on Dinakaran.

Tags : Kamal Nath ,Chindwara ,New Delhi ,Congress party ,Lok Sabha ,congress ,UP ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு