×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் கண்டங்களை தெரிவித்து வருகின்றார். தமிழகம், கேர்ளா, டெல்லி , மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் நேற்றே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்தினாலும், தற்போது தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் வெளியிட்ட அரசு குறிப்பில் இந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் மத்திய அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் இலங்கை முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்த CAA சட்டம். இதன் காரணமாகத்தான், திமுக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி இதனை எதிர்த்து குரல் கொடுத்துள்ளோம்.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என தமிழக முதல்வர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Union Government ,Tamil Nadu ,Kerla ,Delhi ,West Bengal ,Nadu ,K. Stalin ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...