- அமைச்சர்
- சேகர்பபு
- சென்னை
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே
- ஸ்டாலின்
- இந்து மதம்
- பி.கே.சேகர்பாபு
- சென்னை மண்டலம்
- சேகர்பாபு
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (12.03.2024) ஆணையர் அலுவலகத்தில் 45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டத்தினை தொடங்கி வைக்கும் வகையில் முதற்கட்டமாக சென்னை மண்டல திருக்கோயில் பணியாளர்களுக்கான முகாமினை தொடங்கி வைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு, அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் பழங்களை வழங்கினார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த ஆட்சி அமைக்கப்படாமல் இருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவினை அமைத்து, அதன் உறுப்பினர்களாக ஆதீன பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியமினம் செய்யப்பட்டனர். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இக்குழுவின் முதல் கூட்டமும், அதனைத் தொடர்ந்து 27.02.2024 அன்று இரண்டாவது கூட்டமும் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், கிராமப்புற திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ.2 லட்சத்தை ரூ.2.5 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும், சட்டப்பிரிவு 49(i) ன் கீழ் வருகின்ற நிதிவசதியில்லாத திருக்கோயில்களில் திருப்பணி செய்திடும் வகையில் முதற்கட்டமாக 500 திருக்கோயில்களில் அரசு நிதி மற்றும் துறை நிதியின் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளவும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள 14 சமணத் திருக்கோயில்களை புனரமைக்க எந்த ஆட்சியிலும் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் தற்போது ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் 100 புதிய குடியிருப்புகள் உருவாக்கிடவும், திருக்கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய 500 தற்காலிக பணியாளர்களை பணி வரன்முறை செய்திடவும், பதிப்பகப் பிரிவின் மூலம் வெளியிடப்பட்டுள்ள 216 அரிய பக்தி நூல்களை உலகெங்கிலுமுள்ள ஆன்மீக அன்பர்கள் படித்து பயன்பெறும் வகையில் மின் நூல்களாக (E-Book) வெளியிடவும், ஏற்கனவே, 103 திருக்கோயில்களில் உள்ள புத்தக விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 100 புத்தக விற்பனை நிலையங்களை ஏற்படுத்தவும், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருக பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவதென்றும், மேலும், 45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டத்தை செயல்படுத்திடவும், கிராம தெய்வ வழிபாட்டை ஆன்மிக அன்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அத்திருக்கோயில் வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழு தீர்மானங்களை நிறைவேற்றிடும் வகையில் இன்று 45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூலம் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை மண்டலம் – 1 மற்றும் 2 ஐ சேர்ந்த 1,277 திருக்கோயில் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் முழு உடற்பரிசோதனை திட்டத்தில் முழு இரத்த பரிசோதனைகள், கண் பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்ஃகோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளும், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இம்முகாம் மூன்று நாட்கள் நடைபெறும். திருக்கோயில் பணியாளர்களுக்கான முழு உடற்பரிசோதனை முகாம் சென்னை மண்டலத்தை தொடர்ந்து 6 மாத காலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு பணியாளர்களின் நலன் காக்கப்படும். திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்றபின், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், திருக்கோயில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, பக்தர்கள் அதிகமாக வருகின்ற 17 மலைக் கோயில்கள் மற்றும் திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.11 கோடி செலவில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரையில் 1,477 திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதேபோல் ரூ.5,979 கோடி மதிப்பிலான 6,810 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதுமுள்ள முருக பக்தர்கள் பங்கேற்கும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் 2 நாட்கள் நடத்தப்பட உள்ளது.
முதலமைச்சர் தலைமையிலான 33 மாத கால ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்டங்களை போல இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து எந்த ஆட்சியிலும் இதுவரையில் நடைபெறவில்லை. எனவேதான், ஆன்மிகப் பெருமக்கள், இறையன்பர்கள் அனைவரும் இந்த ஆட்சியையும், முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளையும் வெகுவாக பாராட்டுகிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பதால் அவரிடமிருந்து நல்லவைகளை எதிர்பார்க்க முடியாது, அல்லவைகளை பேசுவது தான் அவருடைய அன்றாட வாடிக்கை. அவருக்கு பதில் சொல்லி நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டாம். மற்ற ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செல்வோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், இ.ஆ.ப., ந.திருமகள், சி. ஹரிப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் கோ.விஜயா, சு.ஜானகி, இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி, கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.